Enable Javscript for better performance
நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    
    parli

    நாடாளுமன்ற இரு அவைகளும் வெள்ளிக்கிழமையும் 15ஆவது நாளாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
     நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது பகுதி கடந்த 5ஆம் தேதி தொடங்கியது முதல், இரு அவைகளும் ஒரு நாள் கூட முழுமையாக நடக்கவில்லை. இந்நிலையில், மக்களவை வெள்ளிக்கிழமை மீண்டும் காலையில் கூடியது. அப்போது சுதந்திர போராட்டத் தியாகிகளான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோரது நினைவுதினத்தையொட்டி, அவையில் மரியாதையும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
     இதைத் தொடர்ந்து, மக்களவையில் கேள்வி நேரம் தொடங்குவதாக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இந்நிலையில், அதிமுக எம்.பி.க்கள், காவிரி மேலாண்மை விவகாரத்தை முன்வைத்தும், டிஆர்எஸ் கட்சியின் எம்.பி.க்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தை முன்வைத்தும் பதாகைகளுடன் வந்து கோஷங்களை எழுப்பினர்.
     உச்ச நீதிமன்றத்தின் எஸ்.சி., எஸ்.டி. தீர்ப்பை சுட்டிக்காட்டி, அதை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
     ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பப்பு யாதவ் எம்.பி.யும், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பதாகைகளுடன் வந்து முழக்கமிட்டார். இதனால், மக்களவையில் கூச்சல்-குழப்பமாக காணப்பட்டது. இதனால், அவையை நண்பகல் 12 மணி வரையிலும் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
     இதைத் தொடர்ந்து, மக்களவை மீண்டும் கூடியபோதும், எம்.பி.க்களின் அமளி நீடித்தது. இதைச் சுட்டிக்காட்டி மகாஜன் பேசுகையில், "எம்.பி.க்கள் அமளியால் அவையில் ஏற்கெனவெ தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; அமளியில் ஈடுபட்டிருக்கும் எம்.பி.க்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே, அந்த தீர்மானத்துக்கு 50 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறதா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியும்' என்றார்.
     இதை எம்.பி.க்கள் கண்டுகொள்ளாமல் முழக்கமிட்டபடியே இருந்தனர். இதனால், மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக மகாஜன் அறிவித்தார்.
     மாநிலங்களவையிலும் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, அதிமுக, திமுக, டிஆர்எஸ் கட்சிகளின் எம்.பி.க்களும், காங்கிரஸ் எம்.பி. ராமசந்திர ராவ் ஆகியோரும், அவையின் மையப் பகுதிக்கு வந்து நின்று தத்தமது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினர்.
     இதைக் கண்ட அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, எம்.பி.க்களின் அமளியால் 3 வாரங்களாக அவை நடக்கவியலாத நிலை காணப்படுவதாக வேதனை தெரிவித்தார். மேலும் அவர், எந்த விவகாரம் குறித்தும் விவாதம் நடத்த தாம் அனுமதி அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்கும் பலனில்லை. இதனால், மாநிலங்களவையை அவர் நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.
     திங்கள்கிழமை விடுமுறை: வரும் திங்கள்கிழமை ஸ்ரீராம நவமி ஆகும். அதனால், அன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாளான செவ்வாய்க்கிழமை மீண்டும் இரு அவைகளும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai