Enable Javscript for better performance
பாதுகாப்பு தளவாட உற்பத்தி: வரைவுக் கொள்கை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்பு தளவாட உற்பத்தி: வரைவுக் கொள்கை வெளியீடு

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வரைவுக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
     அதிநவீன பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக, அரசுத் துறை மட்டுமன்றி தனியார் துறை பங்களிப்பும் ஊக்குவிக்கப்படும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க் கப்பல்கள், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், சிறிய ரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள், கண்காணிப்பு கட்டமைப்புகள் உள்பட 12 வகையான தளவாடங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை தற்சார்புடைய நாடாக மாற்ற முடியும்.
     மேலும், 2025-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் துறை உற்பத்தி, சேவைகளின் வாயிலாக ரூ.1,70,000 கோடி விற்றுமுதல் ஈட்டவும், இதற்காக கூடுதலாக ரூ.70,000 கோடி முதலீடு செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்களின் மதிப்பை, 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.35,000 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
     பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான உரிமங்கள் வழங்கும் நடைமுறையை தாராளமயமாக்கவும், விண்ணப்பித்த 2 வாரங்களில் நிறுவனங்களுக்கு உரிய பதில் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வரைவுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     இந்த கொள்கை தொடர்பாக பாதுகாப்புத் துறைசார் வல்லுநர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. தற்போது ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai