Enable Javscript for better performance
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் திடீர் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் திடீர் முடிவு

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rahul_gandhi

    மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதென்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
     ஏற்கெனவே தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் அத்தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     ஆந்திரத்தை பிரித்து தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என அந்த மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செவிமடுக்கவில்லை.
     இதைத் தொடர்ந்து, மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்கு தெலுங்கு தேசம் முதலில் ஆதரவு அளித்தது. பின்னர் அந்த ஆதரவை அக்கட்சி திரும்பப் பெற்றது.
     இதனிடையே, ஆந்திர சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதன் தொடர்ச்சியாக, மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
     இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக, டிஆர்எஸ், தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது பகுதி ஒரு நாள் கூட முழுவதும் நடக்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் எடுத்துக் கொள்ளவில்லை.
     இந்நிலையில், தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் தற்போது மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
     மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் இந்தத் தீர்மானம் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 27) கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. இந்த நாளில், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவை அலுவலில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
     இத்தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொண்டு வரவுள்ளார். இதுதொடர்பாக மக்களவைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மார்ச் 27ஆம் தேதி அவை நிகழ்ச்சி நிரலில், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் பட்டியலிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவது குறித்து, அக்கட்சித் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே பேசி நடத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai