Enable Javscript for better performance
மாநிலங்களவைத் தேர்தல்: அபிஷேக் சிங்வி, வீரேந்திரகுமார் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மாநிலங்களவைத் தேர்தல்: அபிஷேக் சிங்வி, வீரேந்திரகுமார் வெற்றி  

    By DIN  |   Published on : 24th March 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ele

    கொல்கத்தா, ராய்ப்பூர், திருவனந்தபுரம்: மாநிலங்களவைக்கு காலியான இடங்களுக்கு வெள்ளிக்கிழமைநடைபெற்ற தேர்தலில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே, காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ் அணிப் பிரமுகர் வீரேந்திரகுமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
     மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 4 பேரும், அக்கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வியும் வெற்றி பெற்றனர்.
     திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நதீமல் ஹக், சுபாஷீஷ் சக்ரவர்த்தி, அபீர் பிஸ்வாஸ், சாந்தனு சென் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர். அக்கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். இவர்கள் ஐந்து பேரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ஜெயந்தா கோலி அறிவித்தார்.
     நதீமல் ஹக் 52, சுபாஷீஷ் சக்ரவர்த்தி 54, அபீர் பிஸ்வாஸ் 52, சாந்தனு சென் 51, அபிஷேக் சிங்வி 47 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இடதுசாரிக் கூட்டணி ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராபின் தேவ் 30 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.
     கேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ் அணியைச் சேர்ந்த எம்.பி.வீரேந்திர குமார் வெற்றி பெற்றார். ஏற்கெனவே மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அவர், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ்குமார், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததைக் கண்டித்து தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டப் பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட வீரேந்திர குமார் 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பி.பாபு 40 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
     கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், அந்த மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எல்.ஹனுமந்தையா, சையது நசீர் ஹுசேன், ஜி.எஸ்.சந்திரசேகர் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகரும் வெற்றி பெற்றார்.
     தெலங்கானாவில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த பி.பிரகாஷ், பி.லிங்கையா யாதவ், ஜே.சந்தோஷ்குமார் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே வெற்றி பெற்றார்.
     சத்தீஸ்கரில் இருந்து ஒரு மாநிலங்களவை இடத்துக்கு மாநில சட்டப் பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் எம்எல்ஏக்கள் பங்கேற்று வாக்களித்தனர். மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
     அதன்படி பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே 51 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லேக்ராம் சாஹு 36 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் தற்போது பாஜகவுக்கு 49 எம்எல்ஏக்களும், காங்கிரஸýக்கு 39 எம்எல்ஏக்களும் உள்ளனர். தவிர ஒரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏவும் ஒரு சுயேச்சையும் உள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai