Enable Javscript for better performance
மாநிலங்களவைத் தேர்தல்: 12 இடங்களில் பாஜக வெற்றி: உ.பி.யில் பாஜகவுக்கு கூடுதல் இடம்; பகுஜன் சமாஜுக்கு- Dinamani

சுடச்சுட

    

    மாநிலங்களவைத் தேர்தல்: 12 இடங்களில் பாஜக வெற்றி: உ.பி.யில் பாஜகவுக்கு கூடுதல் இடம்; பகுஜன் சமாஜுக்கு பின்னடைவு

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aj

    உத்தரப் பிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் 26 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்பட 12 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட அக்கட்சியின் 4 வேட்பாளர்களும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 4 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
     இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் தேவைகளை அறிந்து சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
     முன்னதாக, 17 மாநிலங்களில் உள்ள 59 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 10 மாநிலங்களில் 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
     உ.பி.யில் 9 இடங்களில் பாஜக வெற்றி: உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. எம்எல்ஏ பலத்தின் அடிப்படையில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற முடியும் என்றபோதும் கூடுதலாக ஒரு வேட்பாளரையும் அக்கட்சி நிறுத்தியிருந்தது. சமாஜவாதி வேட்பாளராக ஜெயா பச்சன் போட்டியிட்டார்.
     இந்நிலையில், அருண் ஜேட்லி உள்பட பாஜகவின் 9 வேட்பாளர்களும், சமாஜவாதி கட்சியின் ஜெயா பச்சனும் வெற்றி பெற்றனர்.
     பகுஜன் சமாஜ் கட்சியின் உத்தி பலிக்கவில்லை: சமாஜவாதியின் ஆதரவுடன் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தது. எனினும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால், பாஜக கூடுதலாக நிறுத்திய வேட்பாளர் அனில் குமார் அகர்வால், 2-ஆவது முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றார்.
     உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டு சேர்ந்து, பாஜகவை தோற்கடித்தன. ஆனால், இரு கட்சிகளின் எம்எம்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால், மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பகுஜன் சமாஜ் கட்சியின் கனவு பலிக்காமல் போய்விட்டது.
     மேற்கு வங்கத்தில்...: மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 4 பேரும், அக்கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வியும் வெற்றி பெற்றனர்.
     திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நதீமல் ஹக், சுபாஷீஷ் சக்ரவர்த்தி, அபீர் பிஸ்வாஸ், சாந்தனு சென் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர். அக்கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். இவர்கள் ஐந்து பேரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ஜெயந்தா கோலி அறிவித்தார்.
     நதீமல் ஹக் 52, சுபாஷீஷ் சக்ரவர்த்தி 54, அபீர் பிஸ்வாஸ் 52, சாந்தனு சென் 51, அபிஷேக் சிங்வி 47 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இடதுசாரிக் கூட்டணி ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராபின் தேவ் 30 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.
     கேரளத்தில்...: கேரளத்தில் ஒரு இடத்துக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ் அணியைச் சேர்ந்த வீரேந்திர குமார் வெற்றி பெற்றார். ஏற்கெனவே மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அவர், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ்குமார், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததைக் கண்டித்து தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டப் பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட வீரேந்திர குமார் 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பி.பாபுவுக்கு 40 வாக்குகளே கிடைத்தன.
     கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி: கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், அந்த மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எல்.ஹனுமந்தையா, சையது நசீர் ஹுசேன், ஜி.எஸ்.சந்திரசேகர் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர்.
     பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகரும் வெற்றி பெற்றார்.
     3 இடங்களை கைப்பற்றிய டிஆர்எஸ்: தெலங்கானாவில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த பி.பிரகாஷ், பி.லிங்கையா யாதவ், ஜே.சந்தோஷ்குமார் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர்.
     சரோஜ் பாண்டே வெற்றி: சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே வெற்றி பெற்றார். இவர் 51 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லேக்ராம் சாஹு 36 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சத்தீஸ்கர் சட்டப் பேரவையில் தற்போது பாஜகவுக்கு 49 எம்எல்ஏக்களும், காங்கிரஸýக்கு 39 எம்எல்ஏக்களும் உள்ளனர். தவிர ஒரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏவும் ஒரு சுயேச்சையும் உள்ளனர்.
     ஜார்க்கண்டில்...: ஜார்க்கண்டில் இரு இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஒரு இடத்தை பாஜகவும், மற்றொரு இடத்தை காங்கிரஸýம் கைப்பற்றியுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai