Enable Javscript for better performance
முகநூலில் இந்தியப் பயனாளர்களின் தகவல் திருட்டு: அமெரிக்க நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    முகநூலில் இந்தியப் பயனாளர்களின் தகவல் திருட்டு: அமெரிக்க நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்  

    By  புது தில்லி  |   Published on : 24th March 2018 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முகநூலில் இந்தியப் பயனாளர்களின் தகவல்களை திருடியதாகக் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள "கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
     இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வரும் 31-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கக் கோரி அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
     தேர்தலில் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முகநூலில் இருந்து இந்தியப் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. தகவல் திருட்டு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அந்த நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸில், "எதனடிப்படையில் பயனாளர்களின் தகவல்களை எடுக்கிறீர்கள். பயனாளர்களிடம் அனுமதி பெற்று தகவல்கள் பெறப்படுகின்றனவா?' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
     குடிமகன்களின் தனிப்பட்ட தகவல்கள் எந்தவகையிலும் திருடப்படாமல் பாதுகாப்பதில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியப் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு பயனாளர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்துகொண்டு தேர்தல்களில் அதை சாதகமாகப் பயன்படுத்தினால் முகநூல் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸகர்பெர்க்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்திருந்தார்.
     உலக அளவில் முகநூலில் 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர். இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் முகநூலைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை, பிரிட்டனைச் சேர்ந்த "கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம், முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அலெக்ஸாண்டர் கோகன் என்ற ஆய்வாளர் உருவாக்கிக் கொடுத்த "செயலி' (ஆப்) மூலமாக, 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திருடி, தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம், சர்வதேச அளவில் கடந்த சில தினங்களாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. முகநூலில் நம்பகத்தன்மை குறித்து பயன்பாட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், முகநூல் சமூக வலைப்பக்கத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதற்கு மார்க் ஸகர்பர்க் மன்னிப்பு கோரினார்.
     இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெறவுள்ளன. "கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' நிறுவனத்துடன் காங்கிரஸýக்கு தொடர்பிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
     இதனிடையே, முகநூல் பயனாளர்களின் விருப்ப, வெறுப்புகளை அறிந்துகொண்டு தேர்தல்களில் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தடுப்பதற்கு விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai