Enable Javscript for better performance
ரூ.1,394 கோடி வங்கி மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1,394 கோடி வங்கி மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் கைது

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட 8 வங்கிகள் கொண்ட கூட்டமைப்பிடம் ரூ.1,394 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்ததாக ஹைதராபாதைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது.
     "தொட்டம் இன்ஃபராஸ்ட்ரக்சர்' என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான தொட்டம்புடி சலாலித், தொட்டம்புடி கவிதா ஆகியோர், பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்காக கடன் பெற்று, அந்த பணத்தை வேறு தேவைகளுக்காக திருப்பிவிட்டதாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கடந்த 2012-இல் புகார் அளித்தது. அதனடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
     இந்நிலையில், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
     ஐடிபிஐ மோசடி: இதனிடையே, ஐடிபிஐ வங்கியில் விவசாயக் கடன், மீன் பண்ணைக் கடன் ஆகியவற்றை வழங்கியதில், ரூ.445.32 கோடி மோசடி செய்ததாக, அந்த வங்கியின் முன்னாள் பொது மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
     இதுதொடர்பாக, சிபிஐ அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     ஹைதராபாதில் உள்ள ஐடிபிஐ வங்கியின் பஷீராபாக் கிளையில் பட்டு ராம ராவ் என்பவர் பொது மேலாளராக பணியாற்றிய காலகட்டத்தில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. அந்த வங்கியில் இருந்து, கடந்த 2009-10, 2010-11, 2011-12 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் 220 பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் ரூ.192.98 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டு ராமராவ், தென்சென்னை பிரிவின் பொது மேலாளர் ஆர்.தாமோதரன் மற்றும் வங்கி ஊழியர்களின் உடந்தையுடன் மோசடி னடைபெற்றுள்ளது.
     அதைத் தொடர்ந்து, வங்கியில் இருந்து வாங்கிய அந்தத் தொகையை யாரும் செலுத்தாததால், அவை வாராக் கடனாகின. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, அந்தக் கடன் நிலுவைத் தொகை, ரூ.445.32 கோடியாக அதிகரித்துவிட்டது.
     அதுமட்டுமன்றி, வங்கியில் இருந்து கடனாக வாங்கப்பட்ட அந்தத் தொகை, விவசாயத்துக்கும், மீன் பண்ணை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படாமல், வேறு வழிகளில் செலவிடப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
     எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மீது வழக்கு:
     இதனிடையே, தேசிய அளவிலான பண்டக வர்த்தக அந்தஸ்து இருப்பதாகக் கூறி, வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக, மல்டி கமோடிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் ஜிக்னேஷ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
     ஃபார்வர்டு மார்க்கெட் கமிஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
     இதுதொடர்பாக, மும்பை, குவாலியர், சிம்லா ஆகிய நகரங்களில் ஜிக்னேஷ் ஷா உள்ளிட்டோருக்குச் சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai