Enable Javscript for better performance
லோக் ஆயுக்தாவை நியமிக்காதது ஏன்? தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    லோக் ஆயுக்தாவை நியமிக்காதது ஏன்? தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாதது ஏன்? என்று தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில், ஒவ்வொரு மாநிலமும் நிச்சயம் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், லோக் ஆயுக்தா சட்டமானது கடந்த 2013ஆம்ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 ஆண்டுகளைக் கடந்து விட்ட பின்னரும், லோக் ஆயுக்தா பல்வேறு மாநிலங்களில் உருவாக்கப்படவில்லை. ஆதலால் லோக் ஆயுக்தா இல்லாத மாநிலங்களில் அதை ஏற்படுத்தும்படி உத்தரவிட வேண்டும். அதேபோல், பல மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இருக்கும் லோக் ஆயுக்தாவுக்கு போதிய நிதியையும், உள்கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தி தருவதில்லை. ஆதலால், லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த போதிய நிதியை பட்ஜெட்டில் மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஒடிஸா மாநிலத்தில் லோக் ஆயுக்தா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆதலால், ஒடிஸா மாநில தலைமைச் செயலாளர், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் விளக்கமளிக்க வேண்டும்.
     ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, புதுச்சேரி, தமிழகம், தெலங்கானா, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணங்களை அந்த மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட 12 மாநிலங்களிலும் எப்போது லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்படும் என்பதை அந்த மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai