Enable Javscript for better performance
20 ஆம் ஆத்மி எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லாது: தில்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    20 ஆம் ஆத்மி எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லாது: தில்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    By நமது நிருபர், புது தில்லி,  |   Published on : 24th March 2018 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AMAM

    ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரை செல்லாது என்று தில்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
     மேலும், இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
     எம்எல்ஏக்கள் 21 பேர், பார்லிமென்டரி செயலர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
     தில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், "துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெறாமல், 21 எம்எல்ஏக்களும் பார்லிமென்டரி செயலர்களாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதம்' எனக் கூறி முதல்வரின் உத்தரவை 2016, செப்டம்பரில் ரத்து செய்தது.
     இதனிடையே, ஆம் ஆத்மி எம்ஏல்ஏ ஜர்னைல் சிங் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட ராஜிநாமா செய்தார்.
     ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரைத்தது. இதற்கு குடியரசுத் தலைவர் அடுத்த நாளே ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரும் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை அறிவித்தது.
     இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்தி பிப்ரவரி 28-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
     எம்எல்ஏக்கள் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரை செல்லாது என்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 79 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை வழங்கியது.
     அதில், "20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடந்த ஜனவரி 19ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரை, இயற்கை நீதியின் நெறிமுறைகளை நிலைநாட்டாமல் மீறப்பட்டுள்ளது. இது சட்டப்படி கெட்ட முடிவாகும். சட்டத்தை செயலற்றதாக்கி உள்ளது. ஆகையால், எம்எல்ஏக்களின் வாய்வழி கருத்துகளைக் கேட்காமலும், தகுதியின் அடிப்படையில் அவர்களின் வாதங்களுக்கு அனுமதி அளிக்காமலும் குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் செய்த பரிந்துரை ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏக்களின் வாதங்களையும், கருத்துகளையும் தேர்தல் ஆணையம் மீண்டும் கேட்க வேண்டும். அதன் பிறகு, அரசின் கீழ் உள்ள ஆதாயம் தரும் பதவி என்பதற்கான பொருள் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். அப்போது, முந்தைய உத்தரவுகளையோ அல்லது கருத்துகளையோ மீண்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் வாதங்களைக் ஏற்றுக்கொண்டால் அவை தவறான முன்உதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 70 எம்எல்ஏக்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவையில், 20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பலம் 46ஆக குறைந்தது. இதனால், தில்லி அரசுக்கு பெரும்பான்மை பலம் குறையவில்லை. இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்அலுவலில் 20 எம்எம்ஏக்களும் பங்கேற்க பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் அனுமதித்தார்.
     வாய்மை வென்றுள்ளது
     ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இரட்டைப் பதவி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்வர் கேஜரிவால் "வாய்மை வென்றுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரைப் பக்கத்தில் "தில்லி மக்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. எனவே, தில்லி மக்களுக்கு வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
     -முதல்வர் கேஜரிவால்
     தேர்தல் ஆணையத்தில் போராடுவோம்
     20 எம்எல்ஏக்கள் சலுகைகளை அனுபவித்துள்ளனர். 20 எம்எல்ஏக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் போராடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.
     தாற்காலிக நிவாரணம் மட்டுமே
     நீதிமன்றம் தாற்காலிக நிவாரணம் மட்டுமே வழங்கியுள்ளது. ஆதாயம் தரும் பதவி என்பது வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai