பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது: மைசூரில் மாணவர்கள் மத்தியில் ராகுல் உரை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது என்று மைசூரில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது: மைசூரில் மாணவர்கள் மத்தியில் ராகுல் உரை

கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பிப்ரவரி மாதம் முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல், கர்நாடக மாநிலத்துக்கு 4-ஆவது முறையாக வருகை தந்துள்ளார். தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. அதுபோல காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற முழக்கத்தோடு பாஜக தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

கர்நாடகத்தில் உள்ள மைசூரு நகருக்கு வருகை தந்துள்ள ராகுல், சனிக்கிழமை காலை சாமுண்டீஸ்வரி கோயிலில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக அரசு செயல்படுத்தாமல் இருந்திருந்தாலே நாடு வளர்ச்சியடைந்திருக்கும்.

இதை அமல்படுத்தியது தொடர்பாக நான் ரிசர்வ் வங்கி கவர்னர், மூத்த பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு அவர்களிடத்தில் எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரித்தபோது அதன் நடைமுறை முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டார்.

நீரவ் மோடி ரூ.22 ஆயிரம் கோடி வங்கிப் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். ஆனால் அதனை உங்களைப் போன்ற ஆக்கப்பூர்வமான இளைஞர்களாகிய உங்களிடம் அளித்திருந்தால் இன்று பல தொழில்களில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதாக கூறினாலும், இந்திய அரசால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

திறமை மிகுந்தவர்களிடம் பொருளாதார உதவி இல்லை. இந்திய நாட்டின் பெருவாரியான பணம் குறிப்பிட்ட 15-20 பேரிடம் மட்டுமே செல்கிறது. ஒவ்வொரு வருடமும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி எங்கு போனது என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com