விலகியது ஆந்திராவுக்காக அல்ல.. அரசியலுக்காகவே: சந்திரபாபு நாயுடுவுக்கு அமித் ஷா கடிதம்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதை அடுத்து, பாஜக தலைவர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விலகியது ஆந்திராவுக்காக அல்ல.. அரசியலுக்காகவே: சந்திரபாபு நாயுடுவுக்கு அமித் ஷா கடிதம்


புது தில்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதை அடுத்து, பாஜக தலைவர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியிருப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் நியாயமற்றது என்று குறிப்பிட்ட அமித் ஷா, அதற்காகக் கூறப்படும் காரணத்தில் உண்மையில்லை என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

சந்திர பாபு நாயுடுவுக்கு அமித் ஷா எழுதியிருக்கும் கடிதத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியிருப்பது சற்றும் எதிர்பாராத விஷயம். தெலுங்கு தேசம் தன்னிச்சையாக எடுத்த முடிவு இது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், வெறும் அரசியலுக்காக மட்டும் எடுக்கப்பட்ட முடிவு. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும்தான் பாஜகவின் முக்கிய நோக்கம். ஆந்திராவின் வளர்ச்சிக்கும் அதில் முக்கிய இடமுண்டு. அதற்கான எந்த வாய்ப்பையும் மத்திய அரசு இதுவரை தவறவிட்டதில்லை. 

துவக்கத்தில் இருந்தே மக்களின் நலன்களை பாதுகாக்க பாஜக வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் அரசு, எதையும் கருத்தில் கொள்ளாமல் மாநிலத்தைப் பிரித்தது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஆந்திர வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. ஆந்திர வளர்ச்சிக்கு பாஜக அரசு எடுத்த நடவடிக்கையை யாருமே கேள்வி கேட்க முடியாத நிலையே தற்போதும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com