Enable Javscript for better performance
எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

    By DIN  |   Published on : 31st March 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பாக வெளியிட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    இதுகுறித்து சுட்டுரையில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரால் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும், அந்த வழக்கில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
    எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் அமைப்புகள், தனிநபர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அந்தப் பதிவில் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.
    மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் வலுவான சீராய்வு மனுவை தயாரிக்கும் வகையில், சட்ட அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், சமூக நீதித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்; இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் வரும் புதன்கிழமைக்குள் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்பாகவே, சீராய்வு மனுவின் அம்சங்கள் தயாரிக்கப்பட்டு விடும்.
    உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தாவர் சந்த் கெலாட் சட்ட ரீதியிலான ஆலோசனையை கேட்டிருந்தார். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்கெனவே அமலில் இருக்கும் 1989ஆம் ஆண்டு எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் வலுவில்லாமல் போய் விடலாம் என்றும், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு நீதி கிடைப்பதில் இந்தத் தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்து நிலவுவதையும் ரவிசங்கர் பிரசாத்திடம் கெலாட் சுட்டிக்காட்டினார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    1989ஆம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம், அந்தப் பிரிவினருக்கு பல உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தில் புதிய குற்றங்கள் தொடர்பான ஷரத்துகளையும் சேர்த்து, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்தத் திருத்தப்பட்ட சட்டம், கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
    இந்நிலையில், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்தின்கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யவும், கைது நடவடிக்கையை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு தலித் அமைப்புகளும், பழங்குடியினர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai