Enable Javscript for better performance
காவிரி: ஓரிரு நாளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை முதல்வர் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி: ஓரிரு நாளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை முதல்வர் நாராயணசாமி

    By DIN  |   Published on : 31st March 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    narayanasamy2

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி ஓரிரு நாளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
    தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு திரும்பிய அவர் சட்டப்பேரவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    உச்ச நீதிமன்றம் காவிரி நதி நீர் தொடர்பாக கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தக் காலக்கெடு கடந்த வியாழக்கிழமையுடன் முடிந்துவிட்டது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
    கடந்த மார்ச் 9-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை நானும், அமைச்சர்களும் நேரிடையாக சந்தித்து, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடிதம் அளித்தோம்.
    இதனையடுத்து, மார்ச் 26-ஆம் தேதி கூடிய புதுவை சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வலியுறுத்தி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். 
    தொடர்ந்து, மார்ச் 28-ஆம் தேதி தில்லி சென்று பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதமரிடம் நேரடியாகக் கொடுத்த கடிதம், மார்ச் 9-ஆம் தேதி எழுதிய நினைவூட்டல் கடிதம் ஆகிய இரண்டு கடிதங்கள், மார்ச் 26-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஆகியவற்றை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து அளித்தோம். அப்படியிருந்தும் மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
    இந்த நிலையில், வழக்குரைஞர்களைச் சந்தித்து மேல் நடவடிக்கை குறித்து ஆலோசித்து தெரிவிக்குமாறு கேட்டுள்ளேன். அவர்களிடமிருந்து ஓரிரு நாளில் பதில் கிடைத்துவிடும்.
    காவிரி மேலாண் மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புதுவை மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடுப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    பிரதமரும், மத்திய நீர்வளத் துறை அமைச்சரும் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பார்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கையை புதுவை அரசு எடுக்கும்.
    நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டோர் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றது தொடர்பாகவும், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நியாயமானது என்று கூறியும் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
    ஆனால், அ.தி.மு.க. எம்.பி.க்களோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூச்சலிட்டு வருகின்றனர். அனைத்துக் கட்சிகளும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர மனு அளித்தும், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை.
    மக்கவைத் தலைவர் அமைதியான முறையில் கூட்டத்தை நடத்த முடியவில்லை எனக் கூறி ஒத்தி வைத்துள்ளார். 50 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தாலே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். வரும் திங்கள்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான நிலை என்ன என்பது தெரியும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai