Enable Javscript for better performance
குஜராத், ஒடிஸாவுக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    குஜராத், ஒடிஸாவுக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமனம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குஜராத் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக எம்.பி. ராஜீவ் சத்தாவும், ஒடிஸாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவின்படி இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    முன்னதாக, குஜராத் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும், அங்கு பாஜகவுக்கு கடும் நெருக்கடியை அளித்தது நினைவுகூரத்தக்கது. இதுவரை தனக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்த குஜராத் மாநில காங்கிரஸாருக்கு அசோக் கெலாட் நன்றி தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அசோக் கெலாட், குஜராத் மாநில பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் தொடர்வார்.
    இதுதவிர அகில இந்திய காங்கிரஸ் சேவா தளத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக லால்ஜி தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பை மகேந்திர ஜோஷி வகித்து வந்தார்.
    காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு பொதுவாக சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதிதான் இந்தப் புதிய நியமனங்கள் என்று தெரிகிறது. அடுத்தகட்டமாக கட்சியின் வேறு முக்கியப் பொறுப்புகளிலும் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai