Enable Javscript for better performance
கூட்டணி முக்கியமல்ல; பாஜகவைத் தோல்வியுற செய்வதுதான் லட்சியம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டணி முக்கியமல்ல; பாஜகவைத் தோல்வியுற செய்வதுதான் லட்சியம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sarathyadav

    கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதுதான் முக்கியம்; அதற்காக காங்கிரஸ், மஜத உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் (சரத்யாதவ் அணி) தலைவர் சரத்யாதவ் தெரிவித்தார்.
    இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
    கர்நாடகத்தில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ், மஜத ஆகிய எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம். மதவாத கட்சியான பாஜகவை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். கர்நாடகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.
    பெங்களூரில் இன்னும் இரண்டு நாள்கள் தங்கியிருப்பேன். அதற்குள் கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வேன். கூட்டணி அமைப்பது குறித்து மஜதவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. 
    அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இத்தேர்தல் அமைந்திருக்கும். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் அக்கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். நமதுநாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை காக்க வேண்டும் என்றால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    பிகாரில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைத்திருந்தோம். அதன்காரணமாக பாஜக தோல்வி அடைந்தது. ஆனால், எங்கள் கட்சியின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். நிதிஷ்குமாரின் இந்த முடிவு எங்களுக்கு பிடிக்கவில்லை. தேசிய அளவில் பாஜகவை அரசியல்ரீதியாக தோற்கடிப்பதே எங்கள் நோக்கமாகும். 
    தொழிலதிபர் விஜய்மல்லையா, நமது நாட்டின் வங்கிகளை ஏமாற்றிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் அவர் மூன்றாவது திருமணம் செய்து கொள்வதற்கு பாஜகவே முக்கிய காரணமாகும். பாஜக கொண்டுவந்த பணமதிப்பிழப்பு கொள்கையால் சாதாரண மக்கள் வெகுவாக பாதித்தனர். வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், தனது வாக்குறுதியை அவர் காப்பாற்ற தவறிவிட்டார் என்றார்.
    பேட்டியின் போது, கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் எம்.பி.நாட கெளடா, முன்னாள் எம்பி கோதண்டராமையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai