Enable Javscript for better performance
சிந்து நதித் தட திட்டங்கள்: ஆய்வு செய்ய அனுமதி கேட்கிறது பாகிஸ்தான்- Dinamani

சுடச்சுட

    

    சிந்து நதித் தட திட்டங்கள்: ஆய்வு செய்ய அனுமதி கேட்கிறது பாகிஸ்தான்

    By DIN  |   Published on : 31st March 2018 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிந்து நதி நீர் வழித்தடத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் மின் திட்டங்களை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - பாகிஸ்தான் இடையே 6 நதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தமானது மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் கடந்த 1960-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
    அதன்படி, பஞ்சாபில் இருந்து உருவாகும் பியாஸ், ராவி, சட்லஜ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கென்றும், ஜம்மு-காஷ்மீரில் உருவாகும் சிந்து, செனாப், ஜீலம் உள்ளிட்ட நதிகள் பாகிஸ்தானுக்கென்றும் பங்கிடப்பட்டன. அதேவேளையில், பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நதிகளில் பாயும் நீரில் இந்தியாவுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அவற்றை அதிக அளவில் இந்தியா பயன்படுத்தாமல் உள்ளது. இதனால், அந்த மூன்று நதிகளின் பெருமளவு தண்ணீர் பாகிஸ்தானுக்கே சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாயும் அந்த நதிகளின் ஊடே ராத்லே மற்றும் கிஷன்கங்கா பகுதிகளில் இருவேறு மின்திட்டங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதன் தொழில்நுட்ப அம்சங்களுக்கும், வடிவமைப்புக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    இந்நிலையில், இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான சிந்து நதிநீர்ப் பகிர்வு ஆணைய பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து சில கோரிக்கைகள் இந்தியாவிடம் முன்வைக்கப்பட்டன. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் சிந்து நதித் தடத்தில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆய்வு செய்யவில்லை என்றும் அதனை தற்போது மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அந்நாடு வலியுறுத்தியது.
    அதுகுறித்து பரிசீலித்த இந்தியா, சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதற்கான அம்சங்களை ஆய்வு செய்து முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai