Enable Javscript for better performance
சிபிஎஸ்இ: பிளஸ்2 பொருளியல் பாடத்துக்கு ஏப்.25-இல் மறுதேர்வு- Dinamani

சுடச்சுட

    

    சிபிஎஸ்இ: பிளஸ்2 பொருளியல் பாடத்துக்கு ஏப்.25-இல் மறுதேர்வு

    By DIN  |   Published on : 31st March 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cbse-exam

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் (எகனாமிக்ஸ்) பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்துக்கான மறுதேர்வு ஜூலையில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இதுதொடர்பான அறிவிப்பை மத்திய கல்வித் துறைச் செயலர் அனில் ஸ்வரூப் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
    சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 12-ஆம் தேதி வரை அத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. அந்தத் தேர்வுகள் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
    குறிப்பாக, பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின. பத்தாம் வகுப்பு கணித பாடத் தேர்வின்போதும் இத்தகைய சர்ச்சைகள் எழுந்தன.
    முதலில் அந்தக் கூற்றுகளை சிபிஎஸ்இ வாரியம் திட்டவட்டமாக மறுத்து வந்தது. இதையடுத்து அதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டபோது பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன் பின்னர், பொருளியல் மற்றும் கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை ஒப்புக் கொண்ட சிபிஎஸ்இ வாரியம், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
    இது, அந்தத் தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் முந்தைய தேர்வை சிறப்பாக எழுதியவர்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாவர் என்றும் வாதிடப்பட்டது.
    இருப்பினும் சிபிஎஸ்இ தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் மறுதேர்வுக்கான தேதியை அனில் ஸ்வரூப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதன்படி, பிளஸ் - 2 பொருளியல் பாடத்துக்கு ஏப்ரல் 25-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான கணிதப் பாடத்துக்கு ஜூலையிலும் மறுதேர்வுகள் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
    வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், கணிதப் பாட வினாத் தாள் தில்லி, ஹரியாணாவில் மட்டுமே கசிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
    தேசிய தேர்வு அமைப்பு இயக்குநர்: இதனிடையே, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய தேர்வு அமைப்பின் (நேஷனல் டெஸ்ட்டிங் ஏஜென்சி) இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி வினீத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் உயர்கல்வி போட்டித் தேர்வுகள் அனைத்தையும் அவரது தலைமையிலான அந்த அமைப்பே நடத்த உள்ளது. 
    நிகழாண்டு பட்ஜெட் உரையின்போது புதிதாக தேசிய தேர்வு அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai