Enable Javscript for better performance
தொழில் செய்ய உகந்த மாநிலமாக கேரளத்தை உருவாக்க உறுதி: பினராயி விஜயன்- Dinamani

சுடச்சுட

    

    தொழில் செய்ய உகந்த மாநிலமாக கேரளத்தை உருவாக்க உறுதி: பினராயி விஜயன்

    By DIN  |   Published on : 31st March 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pranaivijayan

    கேரளத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக உருவாக்குவதற்கு தாம் உறுதிபூண்டிருப்பதாக அந்த மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
    தொழில்செய்வதற்கு உகந்த பகுதியாக கேரளத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம். இதுதொடர்பாக அரசுக்கு வந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலமானது முதலீட்டாளர்களுக்கு விருப்பமான பகுதியாக திகழ வேண்டும் என்பதே எங்களது விருப்பம் ஆகும். திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களை களையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
    விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்குள், அதன் மீது முடிவெடுக்கப்படாமல் இருந்தால், அந்த விண்ணப்ப மனுவானது ஏற்கப்பட்டு விட்டதாக கருதப்படும்.
    கேரளத்தில் ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதையடுத்து, இன்டல், டெக் மஹிந்திரா போன்ற முக்கிய நிறுவனங்களுடன், கேரளத்தில் முதலீடு செய்வது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    தொழில் செய்ய கேரளம் உகந்த இடம் கிடையாது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இதனால், மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் அச்சப்படுகின்றன. இது மெதுவாக மாறும்.
    கேரள மாநிலமானது தற்போது உற்பத்தியாகும் பொருள்களை விற்கக்கூடிய சந்தையாக திகழ்கிறது. பிற மாநிலங்களிடம் அதிக நிலப்பரப்பு இருக்கிறது. இதனால், முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இலவசமாக நிலங்களை அந்த மாநிலங்கள் அளிக்கும். ஆனால், கேரளத்தின் நிலை அப்படி அல்ல. எங்களது மாநிலத்தில் அதிக அளவு நிலம் இல்லை. அதேநேரத்தில், பணி செய்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு கேரளம் முயற்சித்து வருகிறது. மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு கேரள அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும் என்றார் பினராயி விஜயன்.
    கேரளத்தில் அவரது தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசின் ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சி அமைந்து கடந்த 25ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai