Enable Javscript for better performance
நீண்டகால மூலதன ஆதாய வரி உள்ளிட்ட பட்ஜெட் அறிவிப்புகள் நாளை முதல் அமல்- Dinamani

சுடச்சுட

    

    நீண்டகால மூலதன ஆதாய வரி உள்ளிட்ட பட்ஜெட் அறிவிப்புகள் நாளை முதல் அமல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீண்டகால மூலதன ஆதாய (எல்டிசிஜி) வரி உள்பட பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர இருக்கின்றன. ஏனெனில் ஏப்ரல் 1 முதல் 2018-19-ஆம் நிதியாண்டு தொடங்குகிறது.
    கடந்த பிப்ரவரி 1-இல் 2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். 
    அதில், பங்கு விற்பனை, பரஸ்பர நிதி போன்ற பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைத்தால் அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீத வரி; மாதச் சம்பளம் வாங்குவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து ரூ.40,000 வரை சலுகை பெறும் வகையில் நிலையான கழிவுத் திட்டம்; ரூ. 250 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் ஈட்டும் தொழிலகங்களுக்கான நிறுவன வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு; மூத்த குடிமக்கள், வங்கி வைப்பு நிதி, அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்புகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 வரை வட்டி பெற்றால், அதற்கு வரி கிடையாது; இதேபோல காப்பீட்டு பிரீமியம், மருத்துவச் செலவு ஆகியவற்றின் கீழ் 80டி பிரிவின் கீழ் மூத்த குடிமக்கள் ரூ.50,000 வரை வரிச் சலுகை பெறலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. 
    அதே நேரத்தில் பெரும் பணக்காரர்களுக்கு வருமான வரியுடன் விதிக்கப்படும் 10 முதல் 15 சதவீத கூடுதல் வரி தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. தனிநபர் வருமான வரி, பெரு நிறுவனங்கள் வரி மீது சுகாதாரம், கல்விக்காக கூடுதல் வரி (செஸ்) 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 
    இந்த பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் 2018-19-ஆம் நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1 (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
    இது தவிர, 10 கோடி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 கோடி பேர் பயனடையும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; நெல் உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கு உற்பத்திச் செலவில் இருந்து அதிகபட்சம் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை; உணவு பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1,400 கோடி; 42 பிரமாண்ட உணவுப் பூங்கா; தேசிய மூங்கில் மேம்பாட்டு வாரியம்; ரூ.1,000 கோடியில் கால்நடைகள், மீன் வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி; மருத்துவ மூலிகைகள் பயிரிட ரூ.200 கோடி உள்ளிட்ட அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.
    ஆனால், நடுத்தர மக்களும், மாத சம்பளதாரர்களும் பெரிதும் எதிர்பார்த்திருந்த வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு குறித்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai