Enable Javscript for better performance
நீதித்துறை சுதந்திரம் தற்போது ஆபத்தில் உள்ளதை நீதிபதி செலமேஸ்வரின் கடிதம் தெளிவாக்குகிறது: அகில இந்த- Dinamani

சுடச்சுட

    

    நீதித்துறை சுதந்திரம் தற்போது ஆபத்தில் உள்ளதை நீதிபதி செலமேஸ்வரின் கடிதம் தெளிவாக்குகிறது: அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செலமேஸ்வர் எழுதியுள்ள கடிதமானது நீதித்துறை சுதந்திரம் தற்போது ஆபத்தில் உள்ளதைக் காட்டுவதாக அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் (ஏஐஎல்யூ) தெரிவித்துள்ளது.
    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்து செலமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் கடந்கத ஜனவரி 12ஆம் தேதி போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுவதாகவும், அவர் தன்னிச்சையான முறையில் செயல்படுவதாகவும் அவர்கள் செய்தியாளர்களிடம் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இதனிடையே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு செலமேஸ்வர் கடந்த 21ஆம் தேதி எழுதிய கடிதத்தில், நீதிமன்ற விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாகக் குறைகூறியிருந்தார். 
    குறிப்பாக, கர்நாடக மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணா பட்டுக்கு பதவி உயர்வு அளிக்குமாறு கொலீஜியம் பரிந்துரைத்தபோதிலும் அவருக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், 'மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் இது நடைபெற்றுள்ளது. ஜனநாயகத்துக்கு ஆபத்தான இந்தப் போக்கு குறித்து பரிசீலிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும்' என்று தனது கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருந்தார்.
    இந்நிலையில், செலமேஸ்வர் எழுப்பிய விவகாரங்கள் குறித்து அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான பிகாஷ் ரஞ்சன் பட்டாசார்யா, பொதுச் செயலாளர் சோம் தத்தா சர்மா ஆகியோர் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செலமேஸ்வர் எழுதியுள்ள கடிதமானது, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமன நடைமுறையில் மத்திய அரசு நேரடியாகத் தலையிடுவதை வெளிப்படுத்துகிறது. நீதித்துறை சுதந்திரம் தற்போது ஆபத்தில் இருப்பதை அந்தக் கடிதம் தெளிவாகக் காட்டுகிறது. தனது கடிதத்தில் நீதிபதி செலமேஸ்வர் வெளிப்படுத்தியுள்ள விவரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் வழக்குரைஞர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    அரசு நிர்வாகத்தின் நெருக்கடிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பணிந்து விட்டார் என்பது ஜனநாயகத்துக்கு அதிக வலியைத் தருகிறது. தற்போதைய மத்திய அரசானது நீதித்துறையின் சுதந்திரத்தைச் சீர்குலைப்பதோடு அதற்கு மூத்த நீதிபதிகள் சிலரும் உடந்தையாக இருக்கின்றனர்.
    கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்துவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஏற்க முடியாவிட்டால் அவற்றை உச்ச நீதிமன்றத்தின் மறுபரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    ஒரு நீதிபதிக்கு எந்தவித விருப்பு வெறுப்பு மற்றும் அச்சமின்றி அரசியல்சாசனத்தைக் காக்கும் கடமை உள்ளது. அவர் பதவிப் பிரமாணத்திலேயே இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. ஆனால், கர்நாடகத் தலைமை நீதிபதி, மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணா பட் தொடர்பான விவகாரத்தில் தனது பதவிப்பிரமாண உறுதிமொழியைக் காக்கத் தவறிவிட்டார். ஜனநாயகம், அரசியல்சாசனம் ஆகிய இரண்டையும் காப்பதற்கு குரலை எழுப்ப வேண்டிய நேரம் இதுவாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai