Enable Javscript for better performance
பாஜக அரசு மீதான தவறான புரிதல் மாற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    
    Ramvilapaswan

    ''பாஜக அரசு மீதான தவறான புரிதல் மாற வேண்டும்; அதை மாற்றுவதற்கு அக்கட்சி கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், உணவுப் பொருள் விநியோகத் துறை அமைச்சராக பாஸ்வான் உள்ளார்.
    இந்நிலையில், அவர் தில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தத் திட்டத்தை செயல்படுத்தினாலும், அனைவரும் பயன்பெறும் வகையில் நிறைவேற்றி வருகிறது. சிறுபான்மை சமூக மக்களின் நலனுக்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
    இருப்பினும், சிறுபான்மை சமூகத்தினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மக்களின் மத்தியில் பாஜக மீதான தவறான புரிதல் இன்னமும் மாறவில்லை. பாஜக, உயர் ஜாதி ஹிந்துக்களுக்கான கட்சி; முஸ்லிம் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற புரிதல் அவர்கள் மத்தியில் உள்ளது. இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். எனவே, பாஜக மீதான புரிதலை மாற்றுவதற்கு அக்கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார்.
    நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு போதிய அளவில் பெரும்பான்மை உள்ளது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் மோடி போதிய இடமளித்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சி வெளியேறும் திட்டம் எதுவுமில்லை. இதுதொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை. பாஜக கூட்டணியிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார் பாஸ்வான்.
    இதனிடையே, பாஸ்வானின் கருத்து, ஒரு கூட்டணிக் கட்சியின் அர்த்தமுள்ள பார்வை என்று பாஜக தெரிவித்துள்ளது. எனினும், பாஜவின் செல்வாக்கு சரிந்து வருவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகளை பாஜக தடுத்து விட்டது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai