Enable Javscript for better performance
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk

    காவிரி விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றோர் 

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும். காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 2.30 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது, திமுக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். அதிமுக சார்பில் ஏப். 3-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்துக்காக காலை முதல் மாலை அமைச்சரவைக் கூட்டம் நடத்தியுள்ளனர். கூட்டத்தில் என்ன முடிவு எடுத்தனர் என்பது குறித்து இதுவரை செய்தி எதுவும் இல்லை. ஆட்சி பறிபோய்விடக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணிந்து போகிறது.
    ராஜிநாமா: அதிமுகவின் 50 எம்.பி.க்கள் ராஜிநாமா செய்தால், எங்களுடைய 4 மாநிலங்களவை உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வர். அதேபோல ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ய முன்வந்தால், அடுத்த நிமிஷமே திமுகவின் 89 எம்.எல்.ஏ.-க்களும் ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், அந்த துணிச்சல் ஆளுங்கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த விவகாரத்துக்காக பிரதமரைச் சந்திக்க நாங்கள் பல முறை கடிதம் எழுதியும் இதுவரை பதில் வரவில்லை என்றார்.
    ஏப். 1-இல் அனைத்துக் கட்சி கூட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசுக்கும், அதற்கு அழுத்தம் கொடுக்காமல் நாடகம் நடத்தும் அதிமுக அரசுக்கும் எதிராக அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துப் போராடவே திமுக விரும்புகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: மத்திய பாஜக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து, தமிழக அரசே பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்க வேண்டிய அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும்.
    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மீண்டும் ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அச்சத்தையும், ஆபத்தை ஏற்படுத்துவதையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
    உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கிறோம். கூட்டுறவு சங்கத் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்.
    மத்திய தொகுப்பில் எடுத்துக் கொள்ளும் மேற்படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்பட 350-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai