Enable Javscript for better performance
போலி செய்தி பதிவேற்றம்: இணையதள உரிமையாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் போலி செய்தியைப் பதிவேற்றம் செய்த வழக்கில் செய்தி இணையதள உரிமையாளர் மகேஷ் ஹெக்டே கைது செய்யப்பட்டார்.
    'போஸ்ட் கார்ட் டாட் நியூஸ்' என்ற செய்தி இணையதளத்தை நடத்தி வருபவர் மகேஷ் விக்ரம் ஹெக்டே. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இணையதளத்தில் 'நஞ்சன்கூடு அருகே சமணத் துறவி முஸ்லிம் இளைஞரால் தாக்கப்பட்டுள்ளார். சித்தராமையாவின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இல்லை' என்ற காணொலியைப் பதவியேற்றம் செய்திருந்தார். இதை 6 ஆயிரம் பேர் மறு பதிவு செய்தனர். 
    இதுதொடர்பாக பெங்களூரு ஒயிட்ஃபீல்டைச் சேர்ந்த கஃபார் பெய்க் (48) என்பவர், குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்ற போலீஸார் மகேஷ் ஹெக்டேவைக் கைது செய்தனர். மேலும், இந்தப் புகாரில் தலைமறைவாக உள்ள இணையதள மேலாளர்கள் கெளரவ் பிரதான், தீபக் ஷெட்டி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். 
    சமணத் துறவி உபாத்யே மயங்க்சாகர் கடந்த மார்ச் 11-ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் வலது தோள்பட்டை, நெற்றி, முகம், முழங்கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரை முஸ்லிம் இளைஞர் தாக்கியதாகவும், சித்தராமையாவின் ஆட்சியில் கர்நாடகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தனது இணையதளத்தில் மகேஷ் ஹெக்டே தவறான தகவலைப் பதிவு செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai