Enable Javscript for better performance
மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக அதிகரிப்பு: சிவராஜ் சிங் சௌஹான் அறிவிப்- Dinamani

சுடச்சுட

    

    மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக அதிகரிப்பு: சிவராஜ் சிங் சௌஹான் அறிவிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sivraj

    மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
    போபாலில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியபோது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். அப்போது அவரிடம், மாநில அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக, பல மாநிலங்களில் பதவி உயர்வுக்கான தகுதியை அரசு ஊழியர்கள் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், மத்தியப் பிரதேசத்தை பொறுத்தமட்டில், அரசு ஊழியர்களுக்கு, அவர்களுக்கான பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெற அனுமதிக்க மாட்டோம். இதன் காரணமாகவே, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 62ஆக அதிகரிப்பதென முடிவு செய்துள்ளோம்' என்றார்.
    காங்கிரஸ் விமர்சனம்: இதனிடையே, மத்தியப் பிரதேச அரசின் முடிவால், அரசு ஊழியர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் கூறுகையில், 'அரசு ஊழியர்களுக்கு இந்த முடிவால் பயனில்லை. அதற்கு மாறாக, இளம் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். மாநிலத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்' என்றார்.
    வேலையில்லா பட்டதாரிகள் சங்கமான பேரோஜ்கார் சேனை அமைப்பின் தலைவர் அக்ஷய் ஹுங்கா கூறுகையில், 'அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்ததன்மூலம், மாநிலத்தில் வேலையில்லாமல் இருக்கும் 1.5 கோடி இளைஞரை முதல்வர் சௌஹான் ஏமாற்றி விட்டார்; இந்த முடிவு, பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களிடம் எடுத்துரைப்போம். சட்ட ரீதியிலான நடவடிக்கையையும் மேற்கொள்வோம்' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai