Enable Javscript for better performance
மாநிலங்களுக்கு இடையே பொருள்களை கொண்டு செல்ல ஜிஎஸ்டி இ-பில் கட்டாயம்: ஏப்ரல் 1 முதல் அமல்- Dinamani

சுடச்சுட

    

    மாநிலங்களுக்கு இடையே பொருள்களை கொண்டு செல்ல ஜிஎஸ்டி இ-பில் கட்டாயம்: ஏப்ரல் 1 முதல் அமல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gst

    மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்புடைய பொருள்களைக் கொண்டு செல்ல ஜிஎஸ்டி இ-பில் (இணைய வழி ரசீது), வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    மாநிலங்களுக்கு இடையே ஜிஎஸ்டி இ-பில் எடுத்துச் செல்லும் நடைமுறை, கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதேபோல், சில மாநில அரசுகள், சம்பந்தப்பட்ட மாநிலத்துக்குள்ளேயே பொருள்களைக் கொண்டு செல்வதற்கு இ-பில் உருவாக்கும் முறையை கொண்டு வந்தன. இதனால் இ-பில் உருவாக்கும் தொழில்நுட்ப அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதனால், இ-பில் வழங்கும் முறையை செயல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.
    மேற்கண்ட காரணங்களை ஆராய்ந்து, ஜிஎஸ்டி நெட்வொர்க் இணையதளத்தில் மட்டும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சாலை மார்க்கமாவோ, ரயில் மூலமோ, விமானங்கள் அல்லது படகுகள் மூலமோ கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு இ-பில் உருவாக்கும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இதில் மாநிலத்துக்குள்ளேயே பொருள்களை எடுத்துச் செல்ல இ-பில் உருவாக்க முடியாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையே பொருள்களை கொண்டு செல்ல இ-பில்லை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்குவது என்றும், மாநிலத்துக்குள்ளேயே பொருள்களைக் கொண்டு செல்ல ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இ-பில்லை கட்டாயமாக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
    அதன்படி, வரும் ஏப்ரல் 1முதல் மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு அதிக மதிப்புடைய பொருள்களை எடுத்துச் செல்ல இ-பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இ-பில்லை உருவாக்கும் தொழில்நுட்ப அமைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எந்த குறுக்கீடும் இன்றி, நாளொன்றுக்கு சுமார் 75 லட்சம் இ-பில்லை உருவாக்கும் வகையில் அந்த அமைப்பு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
    இ-பில் உருவாக்கும் அமைப்பை உருவாக்கியுள்ள தேசிய தகவல் மையம், வரும் ஏப்ரல் 1 முதல் இந்த அமைப்பு சிறப்பாக செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக பல சோதனைகளை நடத்தி பார்த்து விட்டதாகவும், இதனால் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப ரீதியில் கோளாறு நேரிட வாய்ப்பில்லை என அந்த அதிகாரி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai