Enable Javscript for better performance
ராம நவமி வன்முறை: மேற்கு வங்கத்தில் இயல்பு நிலை திரும்புகிறது- Dinamani

சுடச்சுட

    

    ராம நவமி வன்முறை: மேற்கு வங்கத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

    By DIN  |   Published on : 31st March 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தின் மூண்ட வன்முறைக்குப் பிறகு பதற்றமாகக் காணப்பட்ட அசன்சோல் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
    எனினும், அந்தப் பகுதியில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இணையதளச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    மேற்கு வங்க மாநிலம், ராணிகஞ்ச், வர்த்மான் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை மூண்டது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார். 2 போலீஸார் காயமடைந்தனர். அதையடுத்து, அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
    இதுகுறித்து அசன்சோல் நகர கோட்டாட்சியர் பி.ராய் செளதரி கூறியதாவது: அசன்சோல் பகுதியில் கடந்த இரு தினங்களாக எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை. எனினும், அந்தப் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதளச் சேவையும், வரும் 4-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    அசன்சோல் நகரின் தெற்குப் பகுதியில் கடைகள், சந்தைகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன என்றார் அவர்.
    இதனிடையே, அசன்சோல், ராணிகஞ்ச் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்கு 4 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் சயந்தன் பாசு கூறினார். 
    வன்முறை வேண்டாம்: இதனிடையே, ராம நவமி வன்முறையில் மகனைப் பறிகொடுத்த நூரனி மசூதியின் இமாம் இம்தத்துல்லா ரஷீத் கூறுகையில், ''வன்முறையில் எனது மகனை இழந்துவிட்டேன். இதுகுறித்து காவல் துறையிடம் நான் புகார் கொடுக்கவில்லை. இந்த விஷயத்தை யாரும் பெரிதாக்க வேண்டாம். பொதுமக்களாகிய நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால், இந்தப் பகுதியில் அமைதி திரும்புவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்'' என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai