Enable Javscript for better performance
ஹரியாணாவில் கார் மீது கல் வீச்சு: உயிர் தப்பினார் அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    ஹரியாணாவில் கார் மீது கல் வீச்சு: உயிர் தப்பினார் அமைச்சர்

    By DIN  |   Published on : 31st March 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹரியாணா மாநிலத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் கார் மீது 2 பேர் கற்களை வீசினர். இதில், அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார். கற்களை வீசிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து அனில் விஜ், பிடிஐ செய்தியாளருக்கு தொலைபேசி வழியாகப் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
    பானிபட் நகரில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்தேன். பின்னர் அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்கு எனது அலுவலக காரில் புறப்பட்டுச் சென்றேன். அப்போது, எனது கார் மீது 2 பேர் கற்களை வீசி தாக்கினர். இதில், காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து விட்டது. நானும், கார் ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினோம் என்றார் அவர்.
    இதுகுறித்து பானிபட் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமைச்சரின் காரின் மீது கற்களை வீசிய இருவரையும் கைது செய்துள்ளோம்; அவர்கள் இருவரும் சற்று மனநிலை சரியில்லாதவர்கள் போன்று தெரிகிறது' என்றார்.
    எனினும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்க்கச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக, கைதானவர்கள் தெரிவித்தனர்.
    அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்களை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி உத்தரவிட்டது. நேர்மையான அலுவலர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    ஆனால், இந்த உத்தரவுக்கு தலித் ஷோஷன் முக்தி மஞ்ச் உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது, தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai