Enable Javscript for better performance
அமலாக்கத் துறை மூலம் மஜத எம்எல்ஏக்களை மிரட்டுகிறது மத்திய அரசு: குமாரசாமி குற்றச்சாட்டு குமாரசாமி கு- Dinamani

சுடச்சுட

    

    அமலாக்கத் துறை மூலம் மஜத எம்எல்ஏக்களை மிரட்டுகிறது மத்திய அரசு: குமாரசாமி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 18th May 2018 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kumarasamy

    அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளைக் கொண்டு, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத)-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்களை மிரட்டும் செயலில் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டிருப்பதாக மஜத கட்சித் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
    இதுகுறித்து கர்நாடக மாநிலம், பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது ஆகும். கர்நாடக விவகாரத்தில் மத்திய அரசு எப்படி நடந்து கொள்கிறது பாருங்கள்? நாட்டில் ஜனநாயகத்தை அழிப்பதற்கு மத்திய அரசு விரும்புகிறது.
    ஆளுநரை சந்தித்து எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பது தொடர்பான பட்டியலை அளித்தேன். ஆனால், எங்களை ஆட்சியமைக்க அவர் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் இல்லாதோருக்கு ஆட்சியமைக்க அவர் வாய்ப்பு அளித்துள்ளார். மேலும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசத்தையும் அவர் அளித்துள்ளார். இதுபோல் நடந்திருப்பது நமது நாட்டில் இதுதான் முதல்முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.
    15 நாள்கள் அவகாசம் கொடுக்க என்ன காரணம்? வியாபாரம் பேசுவதற்காகவா?
    அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எம்எல்ஏக்களை மிரட்டுவதற்கும், நிர்ப்பந்தம் அளிப்பதற்கும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது.
    காங்கிரஸ் எம்எல்ஏ அனந்த் சிங் மீண்டும் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதா? எனக் கேட்கிறீர்கள். அவருக்கு எதிராக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதனால் அமலாக்கத் துறையைக் கொண்டு அவரை மிரட்டுகிறது. அனந்த் சிங்குடன் நான் பேசவில்லை. 
    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர்தான், இதை என்னிடம் தெரிவித்தார்.
    பாஜக அல்லாத கட்சிகள், இந்த விவகாரத்தில் கரம்கோர்க்க வேண்டும். இதற்கான முயற்சிகளை எனது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவெ கௌடா முன்னெடுக்க வேண்டும். பிராந்திய கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், தலைவர்களை பாஜகவுக்கு எதிராக அவர் ஒருங்கிணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் பாஜகவுக்கு எதிராக இணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். தேசத்தின் பாதுகாப்பை அவர்கள் பாதுகாக்க வேண்டும். தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அவர்கள் மறக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்றார் குமாரசாமி.
    முன்னதாக, குமாரசாமி புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மஜத எம்எல்ஏக்களிடம் பாஜக ரூ.100 கோடி பேரம் பேசுகிறது' எனக் குற்றம்சாட்டினார். இதை பாஜக திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai