Enable Javscript for better performance
எடியூரப்பாவின் விதி ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் உள்ளது- Dinamani

சுடச்சுட

    

    எடியூரப்பாவின் விதி ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் உள்ளது

    By DIN  |   Published on : 18th May 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pc

    கர்நாடகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடியூரப்பாவின் விதியானது, மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அவரளித்த கடிதத்தில் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
    முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடியூரப்பாவின் விதி, ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அவர் அளித்துள்ள கடிதத்திலேயே உள்ளது. ஆட்சியமைக்க அவர் உரிமை கோரிய நிலையில், அந்தக் கடிதத்தில் 104 எம்எல்ஏக்களை விட அதிகமாக ஒரு எண்ணிக்கை கூட இருக்காது. ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பிலும் எந்தவொரு எண்ணிக்கையும் குறிப்பிடப்படவில்லை.
    நான் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஒருவேளை எடியூரப்பா இடத்தில் நான் இருந்திருந்தால், ஆட்சியமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரையில் பதவியேற்றிருக்க மாட்டேன் என்று ப.சிதம்பரம் கூறினார்.
    சமீபத்தில் நிறைவடைந்த கர்நாடக இடைத் தேர்தலில் பாஜக தனிப்பெருங் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சியமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. எனினும், ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய எடியூரப்பா, பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிப்போம் என்று கூறியிருந்தார்.
    இந்நிலையில், எடியூரப்பா ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர் வஜுபாய் வாலா, அவர் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசம் அளித்தார்.
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. 
    எடியூரப்பா பதவியேற்பதை தடுக்க முடியாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஆட்சியமைக்கும் விவகாரம் தனது இறுதித் தீர்ப்பை பொறுத்தது என்று தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai