Enable Javscript for better performance
எடியூரப்பா பதவியேற்றதை கண்டித்து கர்நாடகத்தில் காங்கிரஸ் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    எடியூரப்பா பதவியேற்றதை கண்டித்து கர்நாடகத்தில் காங்கிரஸ் போராட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karnataka

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை கண்டித்து, தலைமை செயலகம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவே கௌடா, குமாரசாமி,

    கர்நாடக முதல்வராக சட்டப் பேரவை பாஜக தலைவர் எடியூரப்பா பதவியேற்றதை கண்டித்து, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழக்கிழமை பதவியேற்றார். இதை கண்டித்து, மாநில தலைமை செயலகம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சித்தராமையா, குலாம் நபி ஆஸாத், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் தர்னாவில் ஈடுபட்டனர்.
    கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசமாக ஆளுநர் அளித்திருப்பது இதற்கு முன்பு எங்கும் நடந்திராத ஒன்றாகும். எடியூரப்பா தனக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்' என்றார்.
    இந்த போராட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கௌடா, கர்நாடக சட்டப் பேரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, அக்கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
    ஆளுநரை திரும்பி அழைக்க கோரிக்கை: இதனிடையே, எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, கர்நாடக ஆளுநராக இருந்த பரத்வாஜ், இந்திய கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி, அவரை திரும்ப அழைக்க வேண்டும் என கடந்த 2011ஆம் ஆண்டு சுட்டுரையில் வலியுறுத்தியிருந்தார். அதேபோல், கர்நாடக ஆளுநராக தற்போது இருக்கும் வஜுபாய் வாலாவை திரும்ப அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai