Enable Javscript for better performance
ஒருநாள் முதல்வர் எடியூரப்பா: காங்கிரஸ் விமர்சனம்- Dinamani

சுடச்சுட

    
    Randeep-Surjewala

    எடியூரப்பா ஒருநாள் முதல்வர்; அவருக்கு பெரும்பான்மை இல்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    கர்நாடகத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரால் ஒரே நாளில் நிரூபிக்க முடியுமா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
    தில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா ஜனநாயகத்தை இருமுறை படுகொலை செய்துள்ளார். முதலில் அவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம் அதனை நிகழ்த்தினார். பின்னர் அவருக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததன் மூலம் அதனை நிகழ்த்தினார். கர்நாடக ஆளுநர், தனது பதவிக்குரிய நிலையில் இருந்து செயல்படாமல், பாஜகவின் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நபரை எந்த விதிகளின் கீழ் முதல்வராக பதவியேற்க அழைத்தார் என்று தெரியவில்லை.
    ஆளுநரின் இந்த அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் தர்ணா நடத்தப்படும். ஜனநாயகத்தை காக்கும் தினமாக இதனை அனுசரிக்க இருக்கிறோம்.
    எடியூரப்பா ஒருநாள் முதல்வராக மட்டுமே இருப்பார். ஏனெனில், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடுத்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எடியூரப்பாவின் முதல் வர் பதவி ஒரே நாளில் முடிவது அப்போது உறுதி செய்யப்படும்.
    கர்நாடகப் பேரவையில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோரால் ஒரே நாளில் நிரூபிக்க முடியுமா? இதனை ஒரு சவாலாகவே நான் அவர்களுக்குக் கூறுகிறேன். துணிவிருந்தால் கர்நாடக பேரவை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை அவர்கள் நிரூபிக்கட்டும்.
    ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்புச் சட்டத்தின்மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai