Enable Javscript for better performance
ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்க கோரும் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்க கோரும் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 18th May 2018 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
    இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை (ஐஐடி) சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் 20 பேர் அடங்கிய குழு ஒன்று தாக்கல் செய்த அந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
    மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட அந்த அமர்வு, இதேபோன்ற இதர மனுக்களை விசாரித்து வரும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் விசாரணையோடு ஐஐடி மாணவர்களின் மனுவையும் இணைத்து உத்தரவு பிறப்பித்தது.
    முன்னதாக, அந்த 20 மாணவர்கள் அடங்கிய குழு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
    ஓரினச்சேர்க்கையை குற்றம் என்று கூறுவது, சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமென அறிவிக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவு 377-ஆனது, சமநிலை, கெளரவம், சுதந்திரம் ஆகியவற்றுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்பை தடுப்பதாக உள்ளது.
    இதனால் சில மனுதாரர்கள் மனு அழுத்தம், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல், மனநிலை பாதிப்பு ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். இது, அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை பாதிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், நாடாளுமன்றமும் தலையிட மறுத்துள்ளதால், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    ஓரினச்சேர்க்கையாளர்களான இந்த மனுதாரர்களில் 19 வயது இந்நாள் மாணவர் முதல், 1982-ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் வரையில் பல்வேறு வயதினர் உள்ளனர்.
    இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவு 377-இன் படி, இயற்கைக்கு மாறான பாலின சேர்க்கையானது, இருதரப்பு ஒப்புதலுடன் நடப்பதாக இருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் கீழ் அபராதமோ, 10 ஆண்டு சிறையோ, ஆயுள் சிறையோ விதிக்கப்படலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai