Enable Javscript for better performance
கர்நாடக அரசியல் எதிரொலி: கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக அரசியல் எதிரொலி: கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்

    By DIN  |   Published on : 18th May 2018 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tejaswi_lalu

    கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தாங்கள் சார்ந்த மாநிலத்தின் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளதாக கோவா, மணிப்பூர் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 
    கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக ஆட்சி அமைப்பதன் எதிரொலியாக காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. மேற்கண்ட இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள போதிலும் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
    கோவா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற போதிலும், அங்கு பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளையும், பாஜக 14 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மூன்று சுயேச்சைகள் மற்றும் கோவா முன்னணி, எம்ஜிபி ஆகிய கட்சிகளின் தலா மூன்று எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
    இதேபோன்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடியூரப்பா அங்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
    இந்நிலையில், கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர், வியாழக்கிழமை கூறியதாவது:
    எங்களிடம் 16 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன்படி கோவா சட்டப்பேரவையில் நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி. அந்த வகையில், கர்நாடக ஆளுநரைப் போல, கோவா ஆளுநரும் தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். 
    இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் வழங்க இருக்கிறோம். ஆளுநர் அழைப்பு விடுத்து எங்களது ஆட்சி அமைந்த பிறகு சட்டப்பேரவையில் எங்களது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார் அவர்.
    தவறை திருத்த வேண்டும்: கோவா மாநில ஆளுநர் கடந்த ஆண்டு செய்த தவறை தற்போது திருத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிப்பதாக அக்கட்சியின் கோவா மாநில தலைவர் கிரிஷ் சோடாங்கர் தெரிவித்தார்.
    கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததைப் போல, கோவா ஆளுநரும் அதே அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆளுநர்களுக்கு இருவேறு விதிமுறைகள் இருக்க முடியாது என்றும் கிரிஷ் சோடாங்கர் தெரிவித்தார்.
    மணிப்பூரிலும் கோரிக்கை: இதேபோன்று மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்கவுள்ளதாக முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான இபோபி சிங் தெரிவித்துள்ளார். அங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 
    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில், அக்கூட்டணி அங்கு ஆட்சி அமைத்தது.

    பிகாரில் லாலு கட்சி போர்கொடி
    பிகார் மாநில சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளது.
    இதுகுறித்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், லாலுவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
    ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதே உரிமை எங்களது கட்சிக்கும் உள்ளது. எனவே, நிதீஷ் அரசை கலைத்துவிட்டு, அரசு அமைக்க ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றார் தேஜஸ்வி.
    பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடம்பெற்றிருந்தது. 
    ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து நிதீஷ் குமார் கூட்டணியை முறித்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai