Enable Javscript for better performance
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: புதன்கிழமை இரவு முழ- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: புதன்கிழமை இரவு முழுவதும் வழக்கு விசாரணை

    By DIN  |   Published on : 18th May 2018 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court

    கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்றது.
    கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கும்படி, சட்டப் பேரவை பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத), காங்கிரஸும் மனு தாக்கல் செய்தன.
    இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்தே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு புதன்கிழமை இரவு 2.11 மணி முதல் வியாழக்கிழமை காலை 5.28 மணி வரை விடிய விடிய விசாரணை நடத்தியது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வியும், மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், பாஜக எம்எல்ஏக்கள் கோவிந்த் எம். கஜ்ரோல், சி.எம். உதாசி, பசவராஜ் பொம்மை ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆகியோரும் ஆஜராகி வாதாடினர்.
    அபிஷேக் சிங்வி வாதாடுகையில், 'எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் அல்லது பதவியேற்பு விழாவை ஒத்திவைக்கும்படி உத்தரவிட வேண்டும்' என்றார். இதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலும், முகுல் ரோத்தகியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    அப்போது முகுல் ரோத்தகி கூறியதாவது:
    கர்நாடக அரசியல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரவு நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பதவியேற்பு விழா நடந்து விட்டால், வானம் இடிந்து விடாது. இது வாழ்வா அல்லது சாவா தொடர்பான விவகாரமோ அல்லது யாருக்கேனும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான விவகாரமோ கிடையாது. 
    அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலத்தில் புதிய அரசமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதை சட்டத்துக்குட்பட்டு ஆய்வு செய்ய முடியும். பதவியேற்பு நடந்தாலும், அதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவு வெளியிட முடியும். அருணாசலப் பிரதேசத்தில் இதுபோல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பணிகளை செய்யவிடாமல் ஆளுநரை நீதிமன்றங்கள் தடுக்கக் கூடாது. நமது நாட்டில் ஒவ்வொரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஆளுநர் அலுவலகத்தை கட்டுப்படுத்த முடியாது என்றார்.
    அப்போது அபிஷேக் சிங்வி குறுக்கிட்டு, மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் பலத்தையும், பாஜகவுக்கு இருக்கும் பலத்தையும் சுட்டிக்காட்டினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
    எடியூரப்பா 7 நாள் அவகாசம் கேட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதைக் காட்டிலும் கூடுதலாக 15 நாள்கள் அவகாசத்தை ஆளுநர் அளித்துள்ளார். 
    இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஒத்தி வைக்க வேண்டும். ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட வேண்டும் என்றார்.
    அப்போது அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், 'எதன் அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார் என மத்திய அரசுக்கு தெரியாது. புதிய அரசு பதவியேற்பதை தடுக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ முடியாது. புதிய அரசு பதவியேற்கட்டும். அதன்பிறகு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கட்டும்' என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
    கர்நாடக சட்டப் பேரவையில் 3 பெரிய கட்சிகள் உள்ளன. 
    அதில் அதிக இடங்களில் வென்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதையடுத்து, காங்கிரஸ் 2ஆவது இடத்திலும், மஜத 3ஆவது இடத்திலும் உள்ளன. 
    இந்நிலையில், மஜத-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு, எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் பாஜகவை விட அதிகமாகி விட்டன. 
    அப்படியிருக்கும்போது, எடியூரப்பா எப்படி ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார்? ஆளுநரிடம் அளிக்கப்பட்ட கடிதங்கள் எங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை. ஊக அடிப்படையிலான கருத்துகள்தான் முன்வைக்கப்பட்டுள்ளன.
    இதுபோன்ற சூழலில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க விடாமல் தடை செய்ய முடியாது. எனினும், கர்நாடகத்தில் புதிய ஆட்சியமைவது, புதிய அரசமைவது ஆகியவை, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிடும் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது ஆகும்.
    இந்த விவகாரத்தில், மஜத, காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து விளக்கம் கேட்டு, கர்நாடக அரசு மற்றும் எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். மனு மீதான விசாரணையையும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கிறோம். 
    அன்றைய தினத்தில், ஆளுநரிடம் எடியூரப்பா கடந்த 15, 16ஆம் தேதிகளில் அளித்த கடிதங்களை அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai