Enable Javscript for better performance
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு: அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு: அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை

    By DIN  |   Published on : 18th May 2018 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ediyurappa

    பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், கர்நாடக முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்ற எடியூரப்பா. உடன், பதவிப் பிரமாணம் செய்து வைத்த கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா.

    கர்நாடக முதல்வராக பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா (75) வியாழக்கிழமை பதவியேற்றார். ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
    முன்னதாக, பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை கர்நாடக முதல்வராக பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. இதனை அவசர வழக்காக புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு விசாரித்த உச்ச நீதிமன்றம், காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
    பாஜகவினர் கொண்டாட்டம்: எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றதை அடுத்து பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், சட்டப் பேரவையில் 104 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள பாஜக, பெரும்பான்மைக்குத் தேவையான 112 எம்எல்ஏக்களின் ஆதரவை எப்படிப் பெறப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகப் பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் கால அவகாசத்தை ஆளுநர் அளித்துள்ளார்.
    தனியாகப் பதவியேற்பு: இதையடுத்து, திட்டமிட்டபடி பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை காலை எடியூரப்பா பதவியேற்றார். மாநில ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். கடவுளின் பெயராலும், விவசாயிகளின் பெயராலும் உறுதிகூறி முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த பாஜகவினர் 'மோடி', 'மோடி' என்று வாழ்த்து கோஷமிட்டனர்.
    வழக்கமாக முதல்வருடன், அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு நடுவே எடியூரப்பா பதவியேற்றதால், அமைச்சர்களாக யாரும் பதவியேற்கவில்லை. சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகுதான் அமைச்சர்களை பாஜக தலைமை தேர்வு செய்யும் என்று தெரிகிறது.
    மோடி, அமித் ஷா பங்கேற்கவில்லை: வழக்கமாக, ஒரு மாநிலத்தில் பாஜக முதல்வர் பதவியேற்கும்போது அதில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் பங்கேற்பது வழக்கம். ஆனால், எடியூரப்பாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடியும், அமித் ஷாவும் பங்கேற்கவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், அனந்த் குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பதவியேற்பு நிகழ்ச்சியும் எளிமையான முறையிலேயே நடைபெற்றது.
    காங்கிரஸ், மஜத ஆர்ப்பாட்டம்: எடியூரப்பா பதவியேற்ற அதே நேரத்தில் மாநில சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'பிரதமர் மோடி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தங்கள் கட்சியை கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்த்தியுள்ளார். பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா, முதல்வராகப் பதவியேற்றது ஜனநாயகப் படுகொலை. தனது செயல்பாடுகள் மூலம் மாநிலத்தில் எம்எல்ஏக்களை விலை பேசுவதற்கு ஆளுநர் வழி வகுத்துள்ளார்' என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
    கோயிலில் வழிபாடு: பதவியேற்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்கு முன்பு, பெங்களூரில் உள்ள ராதாகிருஷ்ணர் கோயிலில் எடியூரப்பா வழிபாடு நடத்தினர். அப்போது, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். பதவியேற்புக்குப் பிறகு, மாநில சட்டப் பேரவைக்கு வந்த எடியூரப்பா, வாயில் படிக்கட்டை தொட்டு வணங்கிவிட்டு உள்ளே சென்றார்.
    மூன்றாவது முறையாக... 75 வயதாகும் எடியூரப்பா, இப்போது மூன்றாவது முறையாக பாஜக சார்பில் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக கடந்த 2007-ஆம் ஆண்டு முதல்முறையாகப் பதவியேற்றபோது எடியூரப்பாவால் 8 நாள்கள் மட்டுமே முதல்வராக இருக்க முடிந்தது. இரண்டாவது முறையாக, 2008 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளே முதல்வராக இருந்தார். அப்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது பதவி பறிபோனது.

    'மனசாட்சிப்படி ஆதரவளிக்க வேண்டும்'
    பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருந்தபோதும், மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், மஜத கட்சியினர் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியில் அமர முயற்சி மேற்கொண்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மனசாட்சிப் படி எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    விரைவில் நிரூபிப்பேன்: எனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். மாநில மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகாலத்துக்கு பாஜக ஆட்சி நடக்கும். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எனக்கு 15 நாள்கள் அவகாசம் அளித்துள்ளார். ஆனால், அந்த அளவுக்கு கால அவகாசம் எடுக்காமல், முடிந்த அளவுக்கு விரைவிலேயே பெரும்பான்மையை நிரூபிப்பேன்.
    கடன் தள்ளுபடி அறிவிப்பு: தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன், நெசவாளர்கள் பெற்றுள்ள ரூ.1 லட்சம் வரையிலான கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதன்படி, கடன் தொகையைத் தள்ளுபடி செய்வது குறித்து ஓரிரு நாள்களில் முடிவெடுத்து, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். கடன் தள்ளுபடி குறித்து தலைமைச் செயலாளரிடம் விவரம் கேட்டிருக்கிறேன். தலைமைச் செயலாளரிடம் இருந்து விவரம் கிடைத்தவுடன் கடன் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

    ஜனநாயகம் தோல்வியடைந்துவிட்டது


     கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்ததன் மூலம் ஜனநாயகம் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், 'கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது பாஜகவின் முறையற்ற செயல்பாடாகும். இதன் மூலம் அரசியல் சாசனத்தை கேலிக்குள்ளாக்கியுள்ளனர். பாஜகவினர் தங்களது அரைகுறை வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த ஜனநாயக தோல்வியை நாடு துக்கமாக அனுசரிக்கும்' என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai