Enable Javscript for better performance
காவிரி ஆணையத்தின் தலைமையகம் தில்லியில் அமையும்: மத்திய அரசு ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி ஆணையத்தின் தலைமையகம் தில்லியில் அமையும்: மத்திய அரசு ஒப்புதல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் அமையும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த மாற்றியமைக்கப்பட்ட செயல் திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதையடுத்து, மத்திய அரசின் செயல் திட்ட வரைவை இறுதி செய்வது, தமிழகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவை மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 
    இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கி அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது, மத்திய அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், புதன்கிழமை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாற்றியமைக்கப்பட்ட செயல் திட்ட வரைவை தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட இறுதி முடிவு அதிகாரம் என்பதை மாற்றம் செய்துவிட்டு, மாநில அரசுகள் மத்திய அரசை அணுகலாம் எனவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் புது தில்லியில் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஷியாம் திவான், மோகன் காத்தர்கி ஆகியோர் ஆஜராகி, 'கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு நிலை, திறந்துவிட வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை மாதந்தோறும் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என வரைவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. வறட்சி ஆண்டுகளில் மட்டுமே இதுபோன்ற விவரங்களை ஆணையத்துக்கு தெரிவிக்கும் வகையில் இருக்க வேண்டும்' என்றனர்.
    இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், 'கர்நாடகத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் வறட்சி ஆண்டாகவே உள்ளது. கர்நாடகத்தின் யோசனையை ஏற்றால், காவிரியில் உரிய நீரை கர்நாடகம் திறந்துவிடாது. கர்நாடகத்தின் இதுபோன்ற முயற்சி செயல் திட்டத்தை வலுவற்றதாக செய்வதாகவே உள்ளது' என்றார். இதைத் தொடர்ந்து, கர்நாடாக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷியாம் திவான், 'அணைகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செயல் திட்ட வரைவில் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அணைகளிலிருந்து நீரைத் திறந்துவிடும் மாநில அரசின் உரிமையைப் பறிக்கச் செய்துவிடும்' என்றார். அப்போது குறுக்கிட்ட கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, 'கர்நாடக அரசின் கருத்துக்கு உடன்படுகிறோம். ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது' என்றார்.
    புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.எஸ். நம்பியார், 'அணைகள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட அதிகாரங்கள் அளிக்கப்படாமல், ஆணையம் வெறும் கண்காணிப்பு செய்தால் மட்டும் போதும் என்றால், காவிரியை சார்ந்துள்ள மாநிலங்களுக்கு பலனளிக்காது' என்றார்.
    இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், 'காவிரி ஆற்றுப் படுகை மழை பற்றாக்குறை கொண்டதாக உள்ளது. நீர் தேவை குறித்து முன்கூட்டிய மதிப்பீடு செய்யாவிட்டால், அணைகளிலிருந்து திறக்கப்பட வேண்டிய நீரின் அளவை முறைப்படுத்த முடியாமல் போகும். இதனால்தான் அணைகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
    முன்னதாக, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்தே, ராகேஷ் திரிவேதி, ஜி. உமாபதி, காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு பெயரிட்டுள்ளது. இதுபோன்ற பெயர் மாற்றம் ஆணையத்தின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடாது. மத்திய அரசு தொடக்கத்திலிருந்தே 'வாரியம்' என்ற சொல்லுக்கு ஆதரவாக இல்லாமல் உள்ளது ' என்றனர். இதற்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், 'வாரியத்தை விட ஆணையமே கூடுதல் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்' என்றார். 
    வாதங்களைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி 'இந்த வழக்கு மீதான உத்தரவு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்படுகிறது. இருப்பினும், மே 22, 23 ஆகிய தேதிகளிலோ பிறப்பிக்கப்படலாம். அந்த உத்தரவு பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே இருக்கும்' என்று தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai