Enable Javscript for better performance
சர்வாதிகார சூழல் நிலவுகிறது: ராகுல் காந்தி சாடல்- Dinamani

சுடச்சுட

    
    RAHUL

    பாகிஸ்தான் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளதைப் போல இந்தியாவிலும் சர்வாதிகார சூழல் நிலவுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    அரசியல் சாசன அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், நாட்டில் அச்சம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    கர்நாடகத்தில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத போதிலும் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
    சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள அவர், ராய்ப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
    நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாஜகவும் கைப்பற்றி வருகின்றன. 
    நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ-க்கள், பத்திரிகை, திட்டக் குழு என அனைத்திலும் தமது இயக்கத்தினரை ஊடுறுவச் செய்யும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புகள் அனைத்தும் நாட்டின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து வருபவை. ஆனால், அந்தக் குரலை நசுக்கும் முயற்சியில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஈடுபட்டுள்ளன.
    காங்கிரஸ் பல ஆண்டுகாலம் நாட்டை ஆண்ட போதிலும் ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதில்லை.
    தற்போது நீதித்துறையில் அச்சம் நிலவுகிறது; பத்திரிகை துறையிலும் அச்சம் நிலவுகிறது; பாஜக எம்.பி.க்கள் கூட பிரதமருக்கு முன்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலையில் உள்ளனர்.
    கடந்த 70 ஆண்டுகளில் பொதுவாக மக்கள்தான் தங்களது பிரச்னைகளுக்கு நீதி வேண்டி நீதித்துறையை நாடி வந்தனர். ஆனால், முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர், தாங்கள் கடமையை செய்யவிடாமல் தடுக்கப்படுகிறோம் என்று கூறி பொதுமக்களின் ஆதரவை வேண்டி வந்தார்கள்.
    பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் இதுபோன்ற சர்வாதிகார சூழல் நிலவும். நீதித்துறையும், பத்திரிகை சுதந்திரமும் அங்குதான் நசுக்கப்படும். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் தற்போதுதான் முதல்முறையாக அந்தச்சூழல் நிலவுகிறது.
    கொலைக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறார். 
    தலித், பழங்குடியின மக்கள் மற்றும் பெண்களின் குரலை நசுக்கிவிட்டு, நாட்டின் வளங்களை குறிப்பிட்ட சிலருக்கு வழங்குவதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் இலக்கு. 
    கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் பேசும்போது, அதுபோன்ற கொள்கை மத்திய அரசிடம் இல்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், கடந்த ஓராண்டில் 15 பணக்காரர்களின் ரூ.2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
    ஊழலை பற்றி பாஜக பேச விரும்பினால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் தொடர்புடைய ஊழல், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழல் ஆகியவை குறித்து அக்கட்சி பேசலாம் என்றார் ராகுல் காந்தி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai