Enable Javscript for better performance
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை: காஷ்மீர் அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை: காஷ்மீர் அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பன்னிரெண்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு அந்த மாநிலத்தின் ஆளுநர் என்.என். வோரா தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
    இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
    பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறுமிகளை பாதுகாப்பது தொடர்பான சட்டம்-2018, ஜம்மு-காஷ்மீர் கிரிமினல் சட்ட (திருத்த) அவசரச் சட்டம்-2018 ஆகியவற்றுக்கு ஆளுநர் வோரா தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதையடுத்து, 2 அவசரச் சட்டங்களும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன என்றார் அவர்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறுமிகளை பாதுகாக்கவும், அத்தகைய கொடிய செயலில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. 
    இதுதொடர்பாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தச் சட்டத்தில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்தார்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பு சட்ட ரீதியில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளின்படி, மாநிலத்துக்கு தேவையான சட்டத்தை அந்த மாநிலம்தான் கொண்டு வர முடியும். எனவே, ஜம்மு-காஷ்மீர் அரசும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai