Enable Javscript for better performance
பசுமைக் கட்டடங்களின் தேவை அதிகரிக்கும்:  வெங்கய்ய நாயுடு- Dinamani

சுடச்சுட

    

    பசுமைக் கட்டடங்களின் தேவை அதிகரிக்கும்:  வெங்கய்ய நாயுடு

    By DIN  |   Published on : 18th May 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkia

    '2050-ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் பாதியளவுக்கும் மேற்பட்டோர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்பதால், பசுமைக் கட்டடங்கள், ஆற்றல்களை நிறைவாக பயன்படுத்தும் முறை ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும்' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
    தில்லியில் நெளரோஜி நகரில் உலக வர்த்தக மையம் அமைப்பது, நேதாஜி நகர் பொது குடியிருப்பு வசதியை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். 
    அதில் பங்கேற்றோரிடையே அவர் பேசியதாவது:
    நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7 முதல் 7.5 சதவீதத்துக்கு நெருக்கமான அளவில் தொடர்ச்சியாக நிலைத்திருக்கச் செய்வதற்கு, பெரும் சவால்களை கடக்க வேண்டியிருக்கும். அதேவேளையில், நமது சுற்றுச்சூழல் மற்றும் வளங்களை பாதுகாப்பதன் மூலமாக வளர்ச்சி நிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    2011-ஆம் ஆண்டில் நாட்டு மக்கள் தொகையில் 31.7 சதவீதம் பேர் நகர்ப் பகுதிகளில் வசித்து வந்தனர். எதிர்வரும் 2050-ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் நகர்ப்புறம் மற்றும் மாநகர பகுதிகளில் வசிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த ஆண்டில் நகர்ப்புற மக்கள் தொகையானது சுமார் 80 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நகர்ப்புற பகுதிகளே நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்பவை.
    நகரங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போதிய வீட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், வளர்ந்து வரும் மக்கள் தொகையை கையாளும் வகையில் நல்ல அடிப்படைக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
    இடங்கள் மற்றும் வளங்களுக்கான பற்றாக்குறை இருக்கும் நிலையில் அவற்றை உகந்தவாறு பயன்படுத்தும் வகையில், பசுமைக் கட்டடங்கள் கட்டுதல், ஆற்றல்களை நிறைவாகப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. 
    அவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொலிவுறு நகரங்களானது வாழும் தரத்தை மேம்படுத்துவதோடு, சுத்தமான, நிலையான சுற்றுச்சூழலையும் வழங்க உதவுகிறது என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai