Enable Javscript for better performance
புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலைக்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலைக்கு ஒத்திவைப்பு

    By  நமது நிருபர், புது தில்லி  |   Published on : 18th May 2018 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court3

    புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நியமித்தது
    செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜூலை 2-ஆவது வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
     புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
     அந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் 22-ஆம் தேதி அளித்தது. அதில், "யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையிலும், துணைநிலை ஆளுநருக்கு நியமன எம்எல்ஏக்களை தன்னிச்சையாக நியமிக்க அதிகாரம் உள்ளது. நியமன எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த நியமனத்துக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம்தான் முறையிட வேண்டும். அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
     இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும், முதல்வரின் பார்லிமென்ட்டரி செயலருமான லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணை மே 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
     இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
     மனுதாரர் லட்சுமி நாராயணன் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகினார். மத்திய அரசு சார்பில் வழக்குரைஞர் ஆர். பாலசுப்ரமணியன் ஆஜராகி, "உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் காவிரி வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகியுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
     ஆனால், இந்த வழக்கை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், "பிற்பகலில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு இருப்பதால், இந்த வழக்கு விசாரணை ஜூலை 2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai