Enable Javscript for better performance
போராட்டக் குணம் கொண்டவர் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    
    bsy

    கர்நாடகத்தின் 23-ஆவது முதல்வராகப் பதவியேற்றுள்ள எடியூரப்பா, போராட்டக்குணம் இயல்பாக வாய்க்கப்பெற்றவர்.
    கர்நாடக அரசியலில் 46 ஆண்டு காலமாக துடிப்போடு செயலாற்றி வரும் பி.எஸ்.எடியூரப்பா,  தென்னிந்தியாவின் நுழைவு வாயிலென கருதப்படும் கர்நாடகத்தில் முதல்முறையாக 2008-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைக் கொண்டு வந்தார். 
    தற்போது 2-ஆவது முறையாக பாஜக ஆட்சியை கர்நாடகத்தில் நிறுவியிருக்கிறார்.  கர்நாடகத்தில் பெரும்பான்மை லிங்காயத்து சமுதாயத்தின்  தலைவராக விளங்கும் எடியூரப்பா, கர்நாடகத்தில் பாஜகவை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்தவர்.
    மண்டியா மாவட்டத்தின் கே.ஆர்.பேட் வட்டத்தின் பூகனகெரே கிராமத்தில் 1943, பிப்.27-ஆம் தேதி சித்தலிங்கப்பா மற்றும் புட்டதாயம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் எடியூரப்பா.  இவர் நான்கு வயதாக இருக்கும் போது தாய் புட்டதாயம்மா காலமானார்.  மண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை படித்து முடித்தார்.  அதன்பிறகு சிவமொக்கா மாவட்டத்தின் சிகாரிபுராவுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது.  15 வயதிருக்கும்போது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த எடியூரப்பா, அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.
    1972-ஆம் ஆண்டு சிவமொக்கா மாவட்டத்தின் சிகாரிபுரா நகராட்சித் தேர்தலில் உறுப்பினராக வென்று,  தனது தேர்தல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய எடியூரப்பா, ஆரம்ப காலம் தொட்டு ஜன சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். 1975-இல் சிகாரிபுரா நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கர்நாடகத்தில் ஜனசங்கத்தின் புதிய வடிவான பாஜக 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதாதளம் ஆட்சி நடத்திய போது எதிர்க்கட்சித் தலைவராக திறம்படப் பணியாற்றியவர் எடியூரப்பா.
    2006-ஆம் ஆண்டு மஜதவுடன் கூட்டணி அமைத்து முதல்முறையாக ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தார்.  அக் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராகப் பதவிவகித்த எடியூரப்பா, 2007 நவ.12-ஆம் தேதி முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.  ஒருவாரகாலத்தில் மஜத தனது ஆதரவை திரும்பப் பெற்றதால்,  அப் பதவியை ராஜிநாமா செய்தார்.
    பின்னர், 2008-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தின் எட்டுத்திசைகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று,  பாஜகவை ஆட்சியில் அமரவைத்தார். 2008, மே 30-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா,  பாஜகவின் உள்கட்சிபூசல் காரணமாக ஆட்சி நடத்தத் தடுமாறினார். 
    பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த போதும்,  உள்கட்சி சூறாவளியில் எடியூரப்பா சுருண்டு விழுந்துவிட்டார்.  சட்ட விரோத சுரங்கத் தொழில் குறித்து லோக் ஆயுக்த அளித்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இடம்பெற்றதால்,  அரசியலில் தன்னால் ஆளாக்கப்பட்ட கட்சியினராலே 2011 ஜூலை 31-ஆம் தேதி முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். 
    கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக முன்னாள் முதல்வரான எடியூரப்பா, ஊழல் குற்றச்சாட்டின்பேரில் 23 நாள்கள் சிறைவாசம் அனுபவித்தார்.  பாஜகவில் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் அக் கட்சியில் இருந்து 2012-ஆம் ஆண்டு வெளியேறி, கர்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கி 2013-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
    10 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும்,  6 இடங்கள் மட்டுமே கர்நாடக ஜனதா கட்சிக்கு கிடைத்தது.  2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஜன.2-ஆம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.  இதைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்ட எடியூரப்பா,  அக் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
    75 வயதாகும் எடியூரப்பாவின் செல்வாக்கு,  அவர் சார்ந்திருக்கும் லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவு பாஜகவின் வெற்றிக்கு உதவும் என்று அக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நம்பியது போல நடந்துமுடிந்துள்ளது.
    சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்த எடியூரப்பா,   2017 நவ.2-ஆம் தேதிமுதல் 75 நாள்கள் கர்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயணம் செய்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார்.  இது தனது கடைசிதேர்தல் என்று எடியூரப்பா அறிவிக்காவிட்டாலும்,  முதல்வர் வாய்ப்புக்கு இதுதான் கடைசிதேர்தல் என்பதை உணர்ந்து தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்.  அதற்கு கைமேல் பலன் கிடைத்ததுபோல,  பாஜகவுக்கு 104 இடங்களில் மக்கள் வெற்றி அளித்துள்ளனர். 
    எந்த கட்சிக்கும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால், ஆட்சிஅமைப்பதில் இழுபறி நிலவி வந்தாலும், கர்நாடக அரசியலில் போர்குதிரை என்று பேர் பெற்ற எடியூரப்பாவின் முதல்வர் கனவு தற்போது நனவாகியுள்ளது.  போராட்ட குணத்தை இயல்பாக பெற்றிருப்பதால்,  சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து,  மக்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தப்படி எடியூரப்பா ஆட்சி நடத்துவார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai