Enable Javscript for better performance
போலீஸார் விசாரணையில் பங்கேற்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சம்மதம்: தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகார- Dinamani

சுடச்சுட

    

    போலீஸார் விசாரணையில் பங்கேற்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சம்மதம்: தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரம்

    By புதுதில்லி  |   Published on : 18th May 2018 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ak

    தில்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸார் தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சம்மதம் தெரிவித்துள்ளார்.
    முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அரசு அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது தில்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தாக்கியதாகப் புகார் எழுந்தது. 
    இது தொடர்பாக அன்ஷு பிரகாஷ் அளித்த புகார் தொடர்பாக பிப்ரவரி 23-இல் சிவில் லைன்ஸில் உள்ள முதல்வர் இல்லத்தில் போலீஸார் விசாரணை நடத்தி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிவிடி கேமராக்களை ஆய்வு செய்தனர். 
    அப்போது, கேமராவின் ஹார்டு டிஸ்கை மீட்டு, தடய அறிவியல் பரிசோதனைக்காக அனுப்பினர். அதன் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.
    இந்த விவகாரம் தொடர்பாக சம்பவத்தன்று கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்வர் கேஜரிவாலின் தனிச் செயலர் பிபவ் குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், முதல்வர் கேஜரிவாலிடம் வெள்ளிக்கிழமை (மே 18) காலை 11 மணிக்கு விசாரணை நடத்த அவருக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அவரது வீட்டிலோ, அலுவலகத்திலோ விசாரணையை மேற்கொள்ளவும் அவரது விருப்பத்தைக் கேட்டிருந்தனர்.
    இந்நிலையில், சிவில் லைன்ஸ் காவல் நிலையப் பொறுப்பாளருக்கு முதல்வர் கேஜரிவால் எழுதியுள்ள கடிதத்தில் தம்மிடம் போலீஸார் விசாரணை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், தம்மிடம் நடத்தப்படும் விசாரணையை தாம் விடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது போலீஸார் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விசாரணை முடிந்த பிறகு அந்த விடியோவின் பதிவை தனக்கு அளிக்க வேண்டும். தனது சிவில் லைன்ஸ் வீட்டில் மாலை 5 மணிக்குப் பிறகு விசாரணைக்கு தயாராக இருப்பதாக கேஜரிவால் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர்.

    வியப்பு இல்லை 
    இந்த விவகாரம் குறித்து தில்லி சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், "தலைமைச் செயலரைத் தாக்குவதற்கான சதி கேஜரிவால் இல்லத்தில் நடந்துள்ளது. இதனால், கேஜரிவாலிடம் போலீஸார் விசாரணை நடத்துவதில் வியப்பு ஏதும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதை விடுத்து, போலீஸாரின் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai