Enable Javscript for better performance
மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி ஜனநாயக படுகொலை: அமித் ஷா- Dinamani

சுடச்சுட

    
    amithsha

    கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (மஜத) கைகோத்ததன் மூலம் ஜனநாயக படுகொலையை செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
    கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 78 இடங்களையும், பாஜக 104 இடங்களையும் கைப்பற்றின. மஜத கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 
    இந்நிலையில், மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கடிதம் அளித்தது. பாஜகவின் சார்பில் எடியூரப்பாவும் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தார்.
    இதுதொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு பிறகு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவித்தார்.
    பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை முதல்வராக்கியதன் மூலம், ஆளுநர் ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டார் என்றும் அரசமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார் என்றும் காங்கிரஸ் விமர்சித்திருந்தது.
    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுட்டுரையில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், 'தேர்தல் முடிவுக்கு பிறகு நம்பிக்கையிழந்த காங்கிரஸ் கட்சி, மஜதவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு வாய்ப்பளித்ததன் மூலம், ஜனநாயகப் படுகொலையை செய்துவிட்டது. 
    கர்நாடகத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் இவ்வாறு செய்தது அவமானகரமானதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
    சுட்டுரையில் வெளியிட்ட மற்றொரு பதிவில், 'கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவுக்கு வாழ்த்துகள். புதிய அரசு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும்' என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai