Enable Javscript for better performance
வங்கித் துறையில் சீரான வளர்ச்சி: பியூஷ் கோயல் உறுதி- Dinamani

சுடச்சுட

    
    puys_koyal

    வங்கித் துறையில் சீரான வளர்ச்சி ஏற்படுத்தப்படுவதுடன், பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் பொறுப்புடைமையும், நேர்மையும் உறுதி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    வங்கிகளில் ஊழல் மற்றும் கடன் மோசடி அதிகளவில் நடைபெறுவதாக சமீப காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
    மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சரான பியூஷ் கோயலிடம் நிதித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் தில்லியில் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் பியூஷ் கோயல் பேசியதாவது:
    வங்கி தலைவர்களின் அறிவார்ந்த முயற்சிகள், பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் உழைப்பு, வங்கிக் கட்டமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் ஆதரவு மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் ஆகிய எல்லாவற்றையும் உறுதுணையாகக் கொண்டு வங்கித் துறையில் சீரான வளர்ச்சியை நிலைநாட்டுவோம்.
    அத்துடன் பொதுத்துறை வங்கிகளில் இருந்து எதிர்பார்க்கப்படும் நேர்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவையும் உறுதி செய்யப்படும்.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, வங்கிகளை முறையாகக் கண்காணிப்பதையும், கடன் மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி மிகுந்த பாராட்டத்தக்க வகையில் செய்து வருகிறது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். முந்தைய அரசுகளில் இருந்த நிலையைக் காட்டிலும், ரிசர்வ் வங்கி தற்போது தீவிர கவனத்துடன் செயல்படுகிறது என்றே நம்புகிறேன் என்றார் கோயல்.
    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ஏராளமான கடன்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, எரிசக்தி, உருக்கு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளை சார்ந்த நிறுவனங்களுக்கு தாராளமாக கடன்கள் வழங்கப்பட்டன. ஆனால், துறை சார்ந்த பிரச்னைகள், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான கடனை பலரும் திருப்பிச் செலுத்தவில்லை.
    இதுதவிர, கடந்த சில மாதங்களாக வங்கிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அடுத்தடுத்து எழுந்த வண்ணம் உள்ளன.
    இதுபோன்ற சூழல்களை கருத்தில் கொண்டே, வங்கிச் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி குறித்து பியூஷ் கோயல் பேசியிருப்பதாகக் கருதப்படுகிறது. முன்னதாக, அருண் ஜேட்லியை தாம் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது நிதித்துறை சார்ந்த சில வழிகாட்டுதல்களை அவர் வழங்கியதன் அடிப்படையில் தற்போது தாம் செயல்பட்டு வருவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai