Enable Javscript for better performance
15-ஆவது நிதிக் குழுவுக்கு எதிர்ப்பு: 6 மாநிலங்கள் குடியரசுத் தலைவரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    15-ஆவது நிதிக் குழுவுக்கு எதிர்ப்பு: 6 மாநிலங்கள் குடியரசுத் தலைவரிடம் மனு

    By DIN  |   Published on : 18th May 2018 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் 15-ஆவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆட்சியில் இல்லாத 6 மாநில அரசுகள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளன.
    நிதிக் குழுவின் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆந்திரப் பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி, பஞ்சாப், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
    15-ஆவது நிதிக் குழுவின் விதிகளானது, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக உள்ளது. மேலும், மாநில அரசுகளின் சுய அதிகாரத்தை பாதிப்பதாகவும், மாநிலங்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
    முந்தைய நிதிக் குழுவின் விதிகளிலிருந்து மாறுபட்டிருக்கும் சில விதிகள், மாநில அரசுகள் தங்களது அரசமைப்புக் கடமையை ஆற்றுவதை தடுக்கும் வகையில் உள்ளது.
    எனவே, 14-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மேலும், மத்திய அரசின் நிதிச் சூழல்களில் ஏற்படும் தாக்கத்தை கையாளுவது தொடர்பான விதிகள் நீக்கப்பட வேண்டும்.
    சரக்கு மற்றும் சேவை வரிகளின் (ஜிஎஸ்டி) கீழ், வரி வலையமைப்பை விரிவாக்கம் செய்வதற்காக மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான விதிகள் நீக்கப்பட வேண்டும். 
    நேரடி மானிய முறை குறித்த விதிமுறைகளும் அகற்றப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    என்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழுவானது, தனது அறிக்கை தயாரிக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபரில் அதை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
    அதில், முக்கிய அம்சமாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மத்திய வரி வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    மேலும், வரி வலையமைப்பை விரிவாக்குதல், மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல், தொழில் தொடங்க உகந்த சூழலை ஏற்படுத்துதல், நேரடி மானிய திட்டத்தின் மூலமாக நிதிச் சிக்கனம் ஆகியவற்றில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளும் மாநில அரசுகளுக்கு செயல்பாட்டு அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கும் அளவை குறிப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai