கர்நாடக வரலாற்றில் தொடரும் அரசியல் குழப்பம்: முதல்வர் நாற்காலியும்.. தொங்கு சட்டப்பேரவையும்.. 

கர்நாடக மாநிலம் இதுபோன்ற தொங்கு சட்டப்பேரவையை அமைத்து ஆட்சி அமைவதற்கு முன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வரலாற்றில் இது முதல்முறையல்ல. 
கர்நாடக வரலாற்றில் தொடரும் அரசியல் குழப்பம்: முதல்வர் நாற்காலியும்.. தொங்கு சட்டப்பேரவையும்.. 

கர்நாடக மாநிலம், இதுபோன்ற தொங்கு சட்டப்பேரவையை அமைத்து ஆட்சி அமைவதற்கு முன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வரலாற்றில் இது முதல்முறையல்ல.    

கர்நாடகாவின் 23வது முதல்வராக பெரும்பான்மை இல்லாத போதிலும் எடியூரப்பா நேற்று (வியாழக்கிழமை) பதவியேற்றார். இதையடுத்து, ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து புதன்கிழமை நள்ளிரவு தாக்கல் செய்யப்பட்ட காங்கிரஸ், மஜத கூட்டணியின் அவசர மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் 2வது கட்ட விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், 104 சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள எடியூரப்பாவின் பாஜகவுக்கு, 1 சுயேட்சை உறுப்பினரின் ஆதரவை உள்ளடக்கினாலும் கூடுதலாக இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மாறாக, காங்கிரஸ் - மஜத கூட்டணி 115 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மையுடன் உள்ளது.  

முன்னதாக, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் வழங்கியிருந்ததால் காங்கிரஸ், மஜத சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் குதிரைப் பேரம் நடத்த வாய்ப்பிருந்தது.

ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்க இருப்பதால் குதிரைப் பேரம் நடத்துவதற்கான வாய்ப்பும் மிக குறைவானது. 

இந்நிலையில், எடியூரப்பா உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளைய வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாளை நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றால் முதல்வர் பதவியில் நீடிப்பார். அப்படி இல்லாத பட்சத்தில், கர்நாடகாவில் ஆட்சி அமைந்த 2 நாளிலேயே ஆட்சி மாறும் நிலை ஏற்படும்.

இதேபோல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி காலத்தின் நடுவிலேயே ஆட்சி மாறுவது கர்நாடக வரலாற்றில் புதிதல்ல. 

இதுபோன்ற சூழ்நிலை கர்நாடகவில் இதற்குமுன் அரங்கேறியிருக்கிறது. 

2004 சட்டப்பேரவை தேர்தல்: 

2004ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும்,  மஜத 58 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதனால், இது மிகப் பெரிய தொங்கு சட்டப்பேரவையாக அமைந்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் மஜத ஆட்சி அமைக்க சம்மதித்தது. அதன்படி முதல்வராக காங்கிரஸ் சார்பில் தரம் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வராக மஜதவின் அப்போதைய மாநிலத் தலைவர் சித்தராமையா பதவியேற்றார். இந்த கூட்டணியால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரால் கூட கேபினட் அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை.

2006ல் ஆட்சி மாற்றம்: 

2006ம் ஆண்டு, முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டிருந்த குமாரசாமி 40 மஜதவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி பாஜகவுடன் கைகோர்த்தார். இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் சேர்ந்து குமாரசாமி அப்போதைய ஆளுநர் சதுர்வேதியை சந்தித்து பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்தார். பின்னர், சட்டப்பேரவையில் நிகழ்ந்த கடும் அமளியால் காங்கிரஸ் முதல்வர் தரம் சிங்கால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. 

இதையடுத்து, பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ள குமாரசாமியை உடனடியாக முதல்வராக பதவியேற்குமாறு ஆளுநர் உரிமை வழங்கினார். அதன்படி குமாரசாமி பிப்ரவரி 3, 2006ல் முதல்வராக பதவியேற்றார். 

இந்த ஆட்சி மாற்றத்தால் குமாரசாமி மீது கோபம் கொண்ட தேவகவுடா அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.ஆனால், 3ல் 2 பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமாரசாமி வசம் இருந்ததால், அவருடைய அணியையே  மஜதவாக கருதுவதாக சபாநாயகர் தெரிவித்துவிட்டார். 

மஜத - பாஜக கூட்டணி:

பாஜக உடனான இந்த கூட்டணியும் சுலபமாக அமையவில்லை. இரண்டு கட்சிகளும் நிறைய ஒப்பந்தங்களுக்குப் பிறகே கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி குமாரசாமியும்,  எடியூரப்பாவும்  தலா 20 மாதங்கள் முதல்வராக பதவி வகிக்க வேண்டும். முதல் 20 மாதங்களுக்கு குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். எடியூரப்பா துணை முதல்வராக பொறுப்பேற்றார். 

அதன்பிறகு குமாரசாமியின் 20 மாத கால முதல்வர் பதவி ஒப்பந்தத்தின்படி முடிவுக்கு வந்தது. ஆனால், ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க குமாரசாமி விரும்பவில்லை. அதன்பிறகு ஆளுநர் அதிரடி முடிவாக குடியரசு ஆட்சியை அமல்படுத்தினார். அதனால், கர்நாடகா 2 நாள் குடியரசுத் தலைவர் ஆட்சியில் செயல்பட்டது.

அதன்பிறகே, ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க குமாரசாமி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் ஒரே ஆட்சிக்காலத்தில் 3வது முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தார்.  

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மஜத ஆதரவு தெரிவிக்காததால், எடியூரப்பாவின் ஆட்சி வெறும் 7 நாட்கள் மட்டுமே நீடித்தது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர், கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கர்நாடகா 6 மாதம் குடியரசு ஆட்சியில் இருந்தது.  

2008 சட்டப்பேரவை தேர்தல்:

2008ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், பாஜக பெரும்பான்மைக்கு 3 இடங்கள் மட்டுமே குறைவாக இருந்தது.

அதன்பின் சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரின் ஆதரவைப் பெற்று எடியூரப்பா அப்போது முதல்வர் ஆனார். இந்த முறை கர்நாடகத்தில் 5 ஆண்டுகள்  ஒரே முதல்வர் ஒரே ஆட்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த 6 சுயேட்சைகளில் 5 பேருக்கு எடியூரப்பா அமைச்சர் பதவி வழங்கினார். 

ஆனால், 38 மாதம் முதல்வர் பதவி வகித்த எடியூரப்பாவால் முழுமையாக ஆட்சியில் அமரமுடியவில்லை. சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் அவரது பெயர் இடம்பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு அவருக்கு கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்தது. இதையடுத்து, எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதன்மூலம், ஆட்சிக்காலத்தின் நடுவில் 2வது முதல்வராக சதானந்த கவுடா பதவியேற்றார். மீதமுள்ள 22 மாத ஆட்சிக் காலத்தில் இவர் முதல்வர் பதவி வகிப்பார் என்று பார்த்தால் உட்கட்சி பூசல் காரணமாக இவரது ஆட்சிக் காலமும் 11 மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. 

முன்னதாக, ரகசிய வாக்கெடுப்பில் சதானந்த கவுடாவிடம் தோல்வியடைந்த ஜகதீஷ் ஷேட்டாரையே முதல்வராக்குமாறு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரச்னை உண்டாக்கினர். இந்த அழுத்தத்தின் காரணமாக  பாஜக மேலிடம் இவரையும் ராஜிநாமா செய்ய சொல்லி கடைசி 10 மாதங்களுக்கு ஜகதீஷ் ஷேட்டாரையே கர்நாடக முதல்வராக அமர்த்தியது. 

இதன்மூலம், அடுத்தடுத்த 2 ஆட்சிக்காலத்தில் கார்நாடக மாநிலம் தலா 3 முதல்வர்களின் கீழ் செயல்பட்டது.  

இந்த ஆட்சி/முதல்வர் மாற்ற குழப்ப சூழ்நிலை தற்போதும் கர்நாடகத்தில் தொடர்கிறது. நேற்று முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா நாளை மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், இந்த ஆட்சிக் காலத்திலும் முதல்வர் நாற்காலி இடம் மாறிக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com