சுடச்சுட

  
  rahulgandhi

  எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாகவே பாஜக வீழ்த்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ""நீதிமன்றங்களை விட, மக்களை விட தாம் உயர்ந்தவர் அல்ல'' என்பதை பிரதமர் நரேந்திர மோடி உணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
  கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகிய சில மணித்துளிகளில் தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறினார்.
  முன்னதாக, கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் கூறி பல்வேறு ஒலிப்பதிவுகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி எம்எல்ஏ-க்களை நேரடியாக விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:
  எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்து பாஜகவை வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை இனியும் தொடரும்.
  பிரதமர் மோடியே நேரடியாக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சித்ததை பார்த்திருப்பீர்கள். ஆக, தாம் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக நாட்டு மக்களிடம் மோடி கூறி வருவது அப்பட்டமான பொய். அவரும் ஊழல் கறை படிந்தவர்தான்.
  பிரதமர் மோடி கடைப்பிடிக்கும் தலைமைத்துவ பண்பு என்பது ஜனநாயக முறையில் இல்லை. அவர் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். இது எல்லோருக்கும் தெரியும், உச்ச நீதிமன்றத்துக்கும் இது தெரியும். அவ்வளவு ஏன், தாம் அப்படித்தான் என்பது மோடிக்கும் தெரியும்.
  கர்நாடக சட்டப்பேரவையில் இன்றைக்கு நடந்ததை கவனித்தீர்களா? அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே பாஜக எம்எல்ஏ-க்களும், அவைத்தலைவரும் பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர். ஆட்சியில் இருந்தால் எந்தவொரு அரசமைப்பையும் அவர்கள் அவமதிப்பார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டு இயக்கங்களுமே அரசமைப்புகளை அவமதிக்கின்றன. அரசமைப்புகளைக் காட்டிலும் பிரதமர் மோடி ஒன்றும் உயர்ந்தவர் அல்ல என்பதை அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்டில் உள்ள நீதிமன்றங்களை விட, பொதுமக்களை விட மோடி உயர்ந்தவர் அல்ல என்றார் ராகுல் காந்தி.
  கர்நாடக சட்டப்பேரவைக்கு 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 104 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.
  இருப்பினும், தமக்கு பெரும்பான்மை இருப்பதாக எடியூரப்பா உரிமை கோரியதன் பேரில் ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.
  இதற்கிடையே, எடியூரப்பா உடனடியாக சனிக்கிழமை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கு கோராமலேயே எடியூரப்பா பதவி விலகுவதாக அறிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai