ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரித்தால் மோடியால் தப்பிக்க முடியாது: ராகுல் காந்தி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய ஊழலை விசாரித்தால் பிரதமர் மோடியால் தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) குற்றம்சாட்டினார். 
ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரித்தால் மோடியால் தப்பிக்க முடியாது: ராகுல் காந்தி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய ஊழலை விசாரித்தால் பிரதமர் மோடியால் தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) குற்றம்சாட்டினார். 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, டஸால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு முதல் தவனையாக ரூ.284 கோடி லஞ்சம் வழங்கியதாக ராகுல் காந்தி இன்று புதிய குற்றச்சாட்டை வெளியிட்டார். இதுதொடர்பாக தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது, 

"ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டால், அதிலிருந்து மோடி தப்பிக்க மாட்டார் என்பது உறுதி. காரணம், ஒன்று அதில் ஊழல் நடந்திருக்கிறது. 2-ஆவது, விமானப் படை அதிகாரியோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி யாரேனும் ஒருவரோ தான் இந்த ஒப்பந்தத்தில் முடிவு எடுத்தார்கள் என்று யாராலும் கூறமுடியாது. இந்த ஒப்பந்தத்தில் முடிவை எடுத்தது யார் என்பது தெளிவாக உள்ளது. அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி வழங்குவதற்காக நரேந்திர மோடி தான் இதை முடிவு செய்துள்ளார்.  

இதில், பிரதமர் தலையிடவில்லை என்றால், இதுதொடர்பாக சிபிஐயோ அல்லது உச்ச நீதிமன்றமோ விசாரணை நடத்தட்டும் என்று அவர் தெரிவித்திருப்பார். ஆனால், அவர் மௌனம் காக்கிறார். நாம் மாட்டிக்கொள்ளபோகிறோம் என்பதை தெரிந்த அவர் பதற்றத்தில் தூக்கத்தை இழந்து இருக்கிறார்.  

விமான நிலையத்துக்கு அருகிலேயே நிலம் இருந்த காரணத்தால் தான் இந்த ஒப்பந்தத்தில் கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததாக டஸால்ட் நிறுவனத்தின் சிஇஓ (எரிக் டிராப்பியர்) தெரிவித்தார். ஆனால், அந்த நிலம் டஸால்ட் நிறுவனம் முதலீடு செய்த தொகையால் தான் வாங்கப்பட்டது என்பது தற்போது வெளியாகியுள்ளது. டஸால்ட் நிறுவனத்தின் சிஇஓ பொய் சொல்கிறார். 

வெறும் 8 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி, நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தில், 284 கோடியை ஒரு நிறுவனம் ஏன் முதலீடு செய்யவேண்டும் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. இந்த முதலீடு தான் டஸால்ட் நிறுவனம் வழங்கிய லஞ்சத்தின் முதல் தவனை என்பது தெளிவாகியுள்ளது. 

மோடி மாட்டிக்கொள்வதற்கு போதுமான ஆவணங்கள் பொது தளத்தில் இருக்கிறது. சிபிஐ இயக்குநர் (அலோக் வர்மா) அந்த ஆவணங்களை ஆய்வு செய்தார். அதனால் தான் சிபிஐ இயக்குநர் பதவி நீக்கப்பட்டார். உண்மை வெளிவருவதை தடுப்பதற்கான மோடி அரசின் ஒரு அங்கமாக தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றார். 

நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவுக்கு மோடி ஒப்புக்கொள்ளமாட்டார். இந்த ஒப்பந்தத்தின் ரகசிய காப்பில் விலை நிர்ணயம் உள்ளடங்காது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com