உ.பி: பைசாபாத் மாவட்டம் அயோத்தி என பெயர் மாற்றம் - யோகி ஆதித்யாநாத்

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நகரம் அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என
உ.பி: பைசாபாத் மாவட்டம் அயோத்தி என பெயர் மாற்றம் - யோகி ஆதித்யாநாத்


அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நகரம் அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை அகல் விளக்கேற்றி 3 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட தீப உற்சவம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜூங் சூக் சிறப்பு விமானம் மூலம் தில்லி வந்தார். தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்

அயோத்தி வந்தடைந்த கிம் ஜங் சூக் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அயோத்தியில் கொரிய நாட்டு மன்னரை திருமணம் செய்துகொண்ட அயோத்தி இளவரசிக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங் சூக் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர். 

பின்னர், ராமன் பிறந்த அயோத்தியில் உத்தரப்பிரதேச அரசு சார்பில் மாநில ஆளுநர் ராம்நாயக் தலைமையில் ராமாயண வரலாற்றை விளக்கும் பண்பாட்டு நிகழ்ச்சி ராம் கதா பூங்காவில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங் சூக் கலந்துகொண்டார். 

நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: இங்கு வந்துள்ள தென் கொரிய அதிபரின் மனைவியை வரவேற்கிறேன். தென் கொரியாவுடன் 2 ஆயிரம் பழமை வாய்ந்த கலாசார தொடர்பை இந்தியா கொண்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கடவுள் ராமரை கொண்டாட இங்கு வந்துள்ளோம்.

நமது பெருமை மற்றும் பாரம்பரியத்தின் குறியீடாக அயோத்தி உள்ளது. முன்னர் அயோத்தி பெயரை சொல்லவே மக்கள் பயந்தனர். கடந்த காலங்களில் எந்த முதல்வரும் அயோத்தி வந்தது இல்லை. அயோத்தி நகரம், நமது கவுரவம் மற்றும் பெருமையின் சின்னமாக விளங்குகிறது. ராம பிரான் என்றவுடன், எல்லாருக்கும் அயோத்தி நினைவுக்கு வரும். அதனால், அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டம், இனி, அயோத்தி மாவட்டம் என, பெயர் மாற்றப்படும். அயோத்திக்கு எந்த சக்தியும் அநீதி இழைக்க முடியாது. அதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன். அயோத்தி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை அறிவித்து உள்ளார்.

அயோத்தியில், ராமரின் தந்தை தசரத ராஜா பெயரில், மருத்துவ கல்லுாரியும், ராமர் பெயரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்றார். சர்யூ ஆற்றின் மீது 151 மீட்டர் சிலை கொண்ட ராமரின் சிலை அமைக்கப்படும் என்பதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், தசரத ராஜா பெயரில், மருத்துவ கல்லுாரியும், ராமர் பெயரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விழாவில் இராமாயண நாடகத்தையும், தென்கொரிய, இந்திய கலைஞர்கள் இணைந்து நடத்திய நடனத்தையும் கிம் ஜுங் சூக் கண்டுகளித்தார். 

இந்நிலையில், சராயு நதிக்கரையில் ஒரே நேரத்தில் 3,01,152 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com