ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி: கேரள அரசு முடிவு

ஒக்கி புயலில் உயிரிழந்த அல்லது காணாமல் போன மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிப்பது தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ஒக்கி புயலில் உயிரிழந்த அல்லது காணாமல் போன மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிப்பது தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து சுட்டுரையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 இதுவரை 194 பேர், பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஆரம்ப நிலை முதல் தொழில் கல்வி வரை பயில்வோர் ஆவர். இவர்களுக்கு இலவச கல்வியும், இலவச தொழில் பயிற்சியும் கேரள அரசு அளிக்கும்.
 இதற்காக கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.13.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியின்கீழ், எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ஆண்டுக்கு தலா ரூ.10,000-ம், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.25,000-ம், உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.30,000-ம் பயன்படுத்தப்படும். பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வரை செலவிடப்படும்.
 2037ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்தப் பதிவுகளில் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 கேரளத்தை ஒக்கி புயல் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கியது. அப்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த கேரளத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் காணாமல் போயினர். அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com